தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது லைக்கா நிறுவனம். விஜயின் கத்தி திரைப்படத்தை தயாரித்ததன் மூலம், இந்த நிறுவனம் கோலிவுட் உலகில் கால் அடி வைத்தது. இதனைத் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை இந்த நிறுவனம் இயக்கியிருக்கிறது.
இப்படியான சூழலில் சமீபகாலமாக முன்னணி நடிகர்களை வைத்து லைக்கா நிறுவனம் படம் எடுத்து வருகிறது. இதில் இந்தியன் 2 திரைப்படம் குறித்த அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
ஒரு வழியாக அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு, சூட்டிங் பணிகளும் தொடங்கின. பார்ட் 2 எடுப்பதாக முடிவு செய்யப்பட்டு, அதன் காட்சிகள் நிறைய எடுக்கப்பட்டதால் இந்தியன் பார்ட் 3 யும் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், மறைந்த நடிகர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். இதன் போஸ்ட் ப்ரடக்சன் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு விக்ரம் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி இருந்த நிலையில் சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமல் திரைப்படம் அதே ஜூன் மாதத்தில் வெளியிடப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் குறித்த அறிவிப்பையும் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜெய் பீம் படத்தை எடுத்த ஞானவேல் இயக்கும், இந்தத் திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன. இப்படியான சூழலில், வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று லைக்கா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த நிறுவனத்தின் தயாரிப்பின் கீழ் அஜித்தின் விடாமுயற்சியின் திரைப்படமும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான சூட்டிங் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. தற்போது அறுபது சதவீத பணிகள் நிறைவடைந்து இருப்பதாக கூறப்படும் சூழலில், படம் குறித்த அடுத்த அப்டேட்டை லைக்கா நிறுவனம் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், அனேகமாக அஜித்தின் பிறந்தநாள் அன்று அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





