தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக அரசியல் களத்தில் வலம் வருகிறார் நடிகர் விஜய். இப்போது நடித்து வரும் தனது 69வது படம் ஜனநாயகன் படத்துடன் சினிமா நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இறங்க அவர் தயாராகி விட்டார். வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவி எனக்குதான் என்றும் சூளுரைத்து விட்டார்.
சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தலா இரண்டு தொகுதிகளை உள்ளடக்கி ஒரு மாவட்ட செயலாளர் என இதுவரை 144 மாவட்ட செயலாளர்கள் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 6 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவர் அர்ஜூனா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இதில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் நடந்தபோது கட்சியின் தலைவர் நடிகர் விஜய் ரெக்கார்டு செய்து பேசிய காட்சி அங்கு ஒளிபரப்பப்பட்டது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் விஜய் பேசியிருப்பதாவது, ஹாய் எல்லோரும் எப்படி இருக்கீங்க? மீட்டிங் நடக்கும்போதே நான் உங்களுடன் பேச வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் இங்கு கொஞ்சம் நெட்வொர்க் பிரச்னை ஏற்பட்டது. அதனால்தான் பேச முடியவில்லை. அதனால் வீடியோ ரெக்கார்ட் செய்து இப்போது அனுப்பி இருக்கிறேன். உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். நம்முடைய இந்த சோசியல் மீடியா படையை தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படையாக கூறுகிறார்கள். இதை நாம் சொல்வதைவிட மற்றவர்கள் சொல்கிறார்கள்.
இனிமேல் நீங்க எல்லோரும் சோசியல் மீடியா ஃபேன்ஸ் மட்டும் கிடையாது. நீங்க எல்லோரும் நம் கட்சியுடைய விர்ச்சுவல் வாரியர்ஸ். இப்படித்தான் உங்கள் எல்லோரையும் கூப்பிட வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். தமிழக வெற்றிக்கழகத்தின் ஐடி விங் என்று சொன்னாலே கண்ணியத்தோடு நடந்து கொள்பவர்கள் என்று எல்லோரும் சொல்ல வேண்டும். இந்த மாதிரி நீங்க நடந்து கொள்ள வேண்டும். உங்களை விரைவில் பார்க்க வருகிறேன். அதுவரைக்கும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வெற்றி நிச்சயம் என்று நடிகர் விஜய் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





