தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து ஜெயித்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். 3 முறை தொடர்ந்து தேர்தலில் ஜெயித்து 11 ஆண்டுகள் புரட்சித் தலைவர் ஆட்சி பொற்கால ஆட்சியமாக தமிழக மக்களுக்கு அமைந்தது. மறைந்து 38 ஆண்டுகளாகியும் இன்றும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு தலைவராக எம்ஜிஆர் மக்கள் மனங்களில் இருந்து வாழ்ந்து வருகிறார்.
அதன்பிறகு அரசியலுக்கு வந்த முன்னணி நட்சத்திர நடிகர் விஜயகாந்தும் மக்களின் பேராதரவை பெற்றார். 2வது முறையாக சட்டசபை தேர்தலை சந்தித்த அவரது தேமுதிக கட்சி திமுகவை பின்னுக்கு தள்ளி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்கட்சித் தலைவராக சட்டசபையில் கேப்டன் அமர்ந்தார். ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மறைந்ததால் தமிழக முதல்வராகும் அவரது கனவு நனவாகவில்லை.
இந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த நடிகர் விஜய் இப்போது தேர்தல் களத்தில் அனலாக கொதித்து திமுக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறியிருக்கிறார். அவரது எழுச்சி என்பது தமிழக வரலாற்றில் எம்ஜிஆருக்கு பிறகு நடந்திருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பல ஆண்டுகளாக எதிர்பார்த்த அவரது ரசிகர்கள் கடைசியில் ஏமாந்து போயினர். வீரவசனம் பேசிக்கொண்டு அரசியல் களத்தில் குறித்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கடைசியில் தனது கட்சியை ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டுக்காக திமுகவிடம் அடகு வைத்தார். இப்போது தலைவன் இருக்கின்றான் என்று ஸ்டாலினுக்கு தேர்தல் பிரசார பாடல் எழுதி பாடும் பரிதாபமான அவலத்துக்கு ஆளாகி விட்டார்.
இந்த சூழலில் எந்த கூட்டணியும் சேராமல் தனித்து தேர்தல் களத்தில் நின்று தன் பலத்தை நிரூபிக்க காத்திருக்கிறார் நடிகர் விஜய். கூட்டணி கட்சிகள் பலம் மட்டுமின்றி தொகுதிகள் வாரியாக 50 கோடி ரூபாய் வரை பணத்தை வாரி இறைத்து ஜனநாயகத்தை பணத்தால் வெல்லவும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. பெரும்பாலான தொகுதிகளில் ஓட்டுக்கு 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை தரப்பட்டதாக இணையத்தில் புகார்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வெல்லப் போவது விஜய் என்கிற ஜனநாயகனா?அல்லது பணநாயகமா என்பது வருகிற மே 4ம் தேதி தேர்தல் முடிவில் தெரிந்து விடும். விஜய் தமிழகத்தில் முதலமைச்சரா, அல்லது எதிர்கட்சி தலைவரா? அல்லது மீண்டும் திரையில் வரும் நாயகனா என்பதை காலம் தான் பதில் சொல்லும். ஆனால் நேற்றே அந்த பதிலுக்கான விதையை மக்கள் வாக்குசாவடிகளில் விதைத்து விட்டனர். மே 4ம் தேதி அறுவடை நாளில் விடை கிடைத்து விடும்.





