தமிழ் சினிமாவில் கடந்தகால கட்டங்களில் தியேட்டர்களிலும் தியேட்டருக்கு வெளியேயும் தான் எம்ஜிஆர் சிவாஜி ரசிகர்கள், ரஜினி கமல் ரசிகர்கள் மோதிக்கொண்டனர். ஆனால் சமூக வலைதளங்களில் நடக்கும் ரசிகர் சண்டையை துவக்கி வைத்தது விஜய் – அஜீத்குமார் ரசிகர்கள் தான்.
அவர்கள் தான் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து இந்த சண்டையை ஆரம்பித்து வைத்தார்கள் என்றால் அது மிகையல்ல. அவதூறாகவும் அசிங்கமாகவும் எல்லை மீறிய சண்டைகளாகவும் அவை இருந்த நிலையில் நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். பிறகு அவர் முதல்வரான நிலையில் இந்த ரசிகர்கள் சண்டை ஓய்ந்தது.
இதற்கிடையே ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஒரு முறை சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தில் கடும் மோதல் ஏற்பட்டு அதுவும் சமூக வலைதளங்களில் அனலை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த ரசிகர்கள் சண்டை அவ்வப்போது ஓய்ந்திருந்தாலும் ஏதாவது ஒரு சண்டை திடீரென தலை தூக்கி பின்னர் தானாகவே அது அடங்கிவிடும்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், ரஜினிகாந்த் பற்றி பேசும்போது அவரை தலைவர் என்றும் முதல்வர் விஜயை விஜய் என்றும் பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினி சார் என்ன பேசினாரோ அதைத்தான் நானும் சொன்னேன். எனக்கு விஜய் சார் உடன் எந்த பிரச்சனையும் இல்லை. அவரை விஜய் என்று குறிப்பிட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று நடிகர் விஷ்ணு விஷால் அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார்.
இருப்பினும் நடிகர் விஷ்ணு விஷால் நடித்த கட்டா குஸ்தி 2 இன்று வெளியான நுிலையில் இந்த படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். விஜய் ரசிகர்களிடமிருந்து சூர்யா நடித்த கருப்பு படம் தப்பித்ததால் தான் அந்த படம் 340 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. அந்த படம் வெளிவந்த நேரத்தில் தேர்தல் முடிவுகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதனால் அந்த படத்தை விஜய் ரசிகர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதனால் படமும் பெரிய வெற்றியை பெற்று விட்டது. ஆனால் இப்போது விஜய் ரசிகர்கள் விஷ்ணு விஷாலுக்கு எதிராக இணையத்தில் வாள் வீசத் துவங்கி விட்டார்கள். முதல்வர் விஜய் பற்றி எதிர்மறையாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது படங்களை விஜய் ரசிகர்கள் குறி வைத்து தாக்குகிறார்கள் என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.





