வெங்கட் பிரபு – தளபதி விஜய் இணைந்திருக்கும் கோட் திரைப்படத்திலிருந்து அப்டேட்டுகள் ஆரம்பம் முதலே வந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த விஷயத்தில் ரசிகர்களுக்கு முழு திருப்தி அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பிலும் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் தான் இதற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
அப்போது படப்பிடிப்பு பூஜையை வீடியோவாக எடுத்து வெளியிட்டு ரசிகர்களிடம் கைதட்டலை பெற்றது ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம். அந்த சமயத்தில் படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்றும் தெரியவந்தது. அதில் பிரசாந்த் பிரபுதேவா லைலா சினேகா மைக் மோகன் உள்ளிட்டோர் இடம் பெற்று இருந்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
திரைப்படத்தில் இரண்டு விஜய் கதாபாத்திரங்கள் நடிக்கும் சூழலில், தந்தை விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் சினேகா. மகன் விஜய்யுடன் கைகோர்க்கிறார் இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி. இதுபோக படத்தில் ஜெயராம், அஜ்மல் வைபவ் பிரேம்ஜி அமரன் வி டிவி கணேஷ் யோகி பாபு உள்ளிட்டோர் உள்ளனர். இதுபோக நடிகர் நடிகைகளில் சில சஸ்பென்சையும் வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
முக்கியமாக இந்த படத்தின் டைட்டிலே பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என படத்திற்கு பெயர் வைத்துவிட்டு அதை சுருக்கமாக கோட் என்று அழைக்கிறார்கள். இதில் ஒரு விஜயை இளமையாக காட்டுவதற்காக ஏ ஐ தொழில் நுட்பத்தை வெங்கட் பிரபு பயன்படுத்தி இருக்கிறார். அதற்கான பணிகளும் தற்போது முடிக்கப்பட்டு விட்டது.
புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இப்படியான சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தில் இருந்து விசில் போடு பாடல் வெளியானது. அதன் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்த நிலையில், அந்த திருப்தியை தர அந்த பாடல் தவறியது என்று தான் கூற வேண்டும். தொடர்ந்து சினேகாவுடன் இன்னொரு பாடலையும் படக்குழுவினர் வெளியிட்டனர்.
அந்த பாடல் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அதன் பிறகு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிறிய வீடியோ கிளிப்பை வெளியிட்டார் வெங்கட் பிரபு. அதில் இரண்டு விஜயும் ஒரே பைக்கில் செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் தான் தற்போது படத்தில் இருந்து மூன்றாவது பாடல், ஆகஸ்ட் மூன்றாம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மீனாட்சி சவுத்ரியும் இளம் வயது விஜயகுமார் பாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.





