நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவக்கி இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி, இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தமிழக அரசியலில் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. வெளிப்படையான நிர்வாகம் தேவைப்படுகிறது. அதனால் வருகிற 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு, முதல்வர் பதவிக்கு வருவேன் என்று நேரடியாகவே விஜய் அறிவித்து, பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழ் சினிமாவில் இருந்து கே பாக்யராஜ், சிவாஜி கணேசன், டி ராஜேந்தர், கார்த்திக், கருணாஸ், சரத்குமார், மன்சூர் அலிகான் என பலர் வந்த போதும் எம்ஜிஆர், விஜயகாந்த் என இரண்டு பேர் மட்டுமே மக்களின் வரவேற்பை, ஆதரவை, பெரிய செல்வாக்கை பெற்றனர். மற்றவர்கள் எல்லாம், அரசியல் கட்சி துவங்கிய அடையாளமே இல்லாமல் போய் விட்டனர்.
அதே நேரத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்த பிறகுதான் அவர்கள் அரசியலுக்கு வந்தனர். ஆனால் விஜய், இப்போதும் உச்சத்தில் இருக்கிறார். தி கோட் படத்தில் நடிக்க ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பது என்ற முடிவையும் எடுத்திருக்கிறார். இந்த சூழலில் விஜய் அரசியல் வருகை, ஆளுங்கட்சியான திமுகவுக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.
தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை மறைந்த பிறகு, கட்சியை தன்வசப்படுத்திய கருணாநிதி பல தகிடுதத்தங்களை செய்து, கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டார். கட்சி வரவு செலவு கணக்கு கேட்ட எம்ஜிஆரை திமுகவை விட்டே வெளியேற்றினார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார் கருணாநிதி. அவர் மறைவுக்கு பிறகு ஸ்டாலின் அரசியல் வாரிசாக உருவானார்.
இப்போது திமுகவின் அடுத்த அரசியல் வாரிசாக உதயநிதி உருவாகி விட்டார். விரைவில் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க திமுகவில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி, அதன்பிறகு அவரது மகன் இன்பநிதி என்று திமுகவையும், தமிழகத்தையும் தங்கள் பூர்வீக சொத்துகளாக மாற்றிவிடும் திட்டத்தில் திமுகவினர் இருந்து வருகின்றனர்.
இந்த சூழலில், தனது தவெக கட்சியின் அரசியல் மாநாட்டை விஜய் மிக பிரமாண்டமாக நடத்தினால், திமுகவுக்கு டேமேஜ் ஆகி விடும் என்பதால் மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் என எங்கு அதற்கான இடம் தேடி விஜய் கட்சியினர் சென்றாலும், அங்கு ஆளுங்கட்சி மிரட்டால் யாருமே மாநாடு நடத்த இடம் தர மறுக்கின்றனர். அதனால் மாநாடு நடத்த இடம் கிடைக்காமல் விஜய் கட்சியினர் தடுமாற்றத்தில் இருந்து வருகின்றனர்.





