நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகத்தில் அடுத்தடுத்த கட்ட பணிகளை வேகமாக முடுக்கி விட்டு வருகிறார். கட்சி பெயரை அறிவித்ததில் இருந்தே அடுத்தடுத்த மூவ்மெண்டுகளை மிக வேகமாக காய்நகர்த்தி வருகிறார். கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து வருகிறார்.
இப்போது விஜய் நடித்துவரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படப்பிடிப்பு, வரும் மார்ச் 31 உடன் முடிவடைகிறது. அதன்பிறகு போஸ்ட் புரடக்சன் பணிகளை படக்குழு மேற்கொள்ள இருக்கிறது. அதனால் முழு வீச்சில் தனது அரசியல் சார்ந்த பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார் விஜய்.
வரும் ஏப்ரல் மாதத்தில் மதுரையில் கட்சியின் முதல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் வகையில் பிரமாண்டமாக இதன் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. அனைவருக்கும் கமகம மட்டன் பிரியாணி விருந்து தரவும் விஜய் முடிவு செய்துள்ளார்.
இந்த மாநாட்டில்தான் கட்சிக்கொடி அறிமுகம், கட்சியின் முக்கிய கொள்கைகள், கோட்பாடுகள், மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் அறிவிப்பு, மாநில நிர்வாகிகள் அறிவிப்பு, மகளிரணி, தொண்டரணி, தொழிலாளர் அணி, வக்கீல் அணி, கட்சி சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகளை அறிவிக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், அடிக்கடி விஜயுடன் தொடர்பில் இருந்து பேசி பேசி முடிவெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே, கட்சியை பலப்படுத்த முக்கியமான அடிப்படை பணி என்பது கட்சியில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்ப்பதுதான். அதன் தற்போதைய இலக்கு 2 கோடி உறுப்பினர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், மிக அதிகமான எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு கட்சியில் முன்னுரிமை தந்து, பதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம், வட்டம், மாநகரம், பேரூராட்சி, ஒன்றியம், கிராமம் என பகுதி வாரியாக உறுப்பினர்களை சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விஜய் கட்சியில் சேர விரைவில் செயலி அறிமுகமாகிறது. இதில் ஆதார் எண், வாக்காளர் அடையா அட்டை, உறுப்பினர் புகைப்படம், தொடர்பு மொபைல் போன் எண் என சகல விவரங்களுடன் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படுகிறது. விஜய் கட்சி செயலி உருவாக்கும் பணியில் தொழில்நுட்ப அணி தற்போது ஈடுபட்டு வருகிறது.





