காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது பழைய பழமொழிதான். ஆனால் இப்போதைக்கும் அது ஏற்றுக்கொள்ள கூடிய விஷயமாக தான் இருக்கிறது. ஏனெனில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்து பரபரப்பான இமேஜில் இருக்கும் நடிகர்கள் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும். இது அவர்களது வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆக அதுதான் காரணம். வேட்டையன், ஜெயிலர் 2 படங்களை தொடர்ந்து 3 தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பு படங்களில் நடிக்க அவர் ஒத்துக்கொண்டு இருக்கிறார். இனி அடுத்தடுத்து அதற்கான அறிவிப்புகள் வெளிவர இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் ஜெயம் ரவி. முதலில் பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை தந்த வருகிறார். குறிப்பாக பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இறைவன், சைரன், அகிலன் போன்ற படங்கள் மொக்கையான படங்களாக போய்விட்டன.
இப்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதால், நித்யாமேனனுக்கு தான் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுதவிர ப்ரதர் என்ற படமும் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நடிகர் ஜெயம் ரவி, கோவாவில் தங்கி இருக்கிறார். இயக்குனர்களிடம் கதை கேட்கும் விஷயத்தில் இருந்து விலகி, தொடர்பு எல்லைக்கு அவர் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயம் ரவி நல்ல நடிகராக இருந்தும், இப்படி அவருக்கான வாய்ப்புகளை தேடிக்கொள்ளாமல் தனிமையில் இருப்பது வளர்ச்சியை கொடுக்காது என்பதும் உண்மை.
குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சில நெருக்கடிகள், சிக்கல்கள் மற்றும் தொடர்ந்து படங்களில் கிடைத்த தோல்விகள் காரணமாக, ஜெயம் ரவி கோவாவில் ஒரு மாதமாக தங்கி ஓய்வில் இருந்து வருகிறார். மன அமைதிக்காக அங்கு தங்கியுள்ள அவர் விரைவில் சென்னைக்கு திரும்பி படப்பிடிப்புகளில் கலந்துக்கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஜெயம் ரவி, எப்போது சென்னைக்கு திரும்ப வருவார் என்பது உறுதியாக தெரியவில்லை.





