மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 50வது படம் மகாராஜா பிளாக் பஸ்டர் மூவியாக மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்துக்கு உலகளவில் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பை தொடர்ந்து விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் மீதான கவனம் ரசிகர்களுக்கு அதிகரித்து வருகிறது.
தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் அடுத்து ரிலீஸாக இருக்கிறது. கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. இந்த படம் முழுவதும் ரயிலிலேயே எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நாசர் வில்லனாக நடித்திருக்கிறார்.
அத்துடன் வெற்றிமாறன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விடுதலை படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. வரும் தீபாவளிக்கு விடுதலை 2 ரிலீஸ் என்று கூறப்பட்டாலும் இன்னும் படப்பிடிப்பை முடிக்காமல் இயக்குனர் வெற்றிமாறன் இழுத்துக்கொண்டே போகிறார். விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய பல காட்சிகள் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டையில் துவங்கி இருக்கிறது. இங்கு தொடர்ந்து 25 நாட்களுக்கு படப்பிடிப்பை நடத்த இயக்குனர் பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளார். ஆனால் படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்பே, பாண்டிராஜிடம் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கண்டிஷனை போட்டுவிட்டுதான் வந்திருக்கிறார்.
அதாவது, உங்கள் ஷூட்டிங்கில் 25 நாட்கள் தொடர்ந்து கலந்துக்கொள்கிறேன். ஆனால் இடையில் திடீரென இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை 2 படப்பிடிப்புக்காக அழைத்தால் சென்றுவிடுவேன், என்று சொல்லி இருக்கிறார். பாண்டிராஜூம் வேறு வழியின்றி ஓகே சொல்லி இருக்கிறார். அப்படி விஜய் சேதுபதி செல்லாமல் இருந்தால், படப்பிடிப்பு தங்கு தடையின்றி நடக்கும். வெற்றிமாறன் அழைக்காமல் இருந்தால் ஷூட்டிங் நடக்கும், அவர் விஜய் சேதுபதியை அழைத்துவிட்டால் மற்ற நடிகர், நடிகைகளை வைத்துதான் படப்பிடிப்பை நடத்த வேண்டும்.
இதற்கிடையே பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை இன்னும் தேர்வாகவில்லை. சமீபத்தில் சிறந்த நடிகையாக தேசிய விருது அறிவிக்கப்பட்ட நடிகை நித்யா மேனனை இந்த படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. திருச்சிற்றம்பலம் படத்துக்கு பிறகு அவர் வேறு தமிழ் படங்களில் இதுவரை நடிக்கவில்லை. அதனால் இந்த படத்துக்கு அவர் ஓகே சொல்லி விடுவார் என்றும் நம்பப்படுகிறது.





