நடிகர் விஜய் இப்போது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், ரஷ்யாவில் இருந்து நடிகர் விஜய் தமிழகம் திரும்பி உள்ளார். இன்று அவர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில், சென்னை நீலாம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில், தனது ஓட்டை பதிவு செய்தார்.
நடிகர் விஜய் நடித்துவரும் கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் அப்பாவுக்கு ஜோடியாக சினேகாவும், மகனுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சுதீப், லைலா, கனிகா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாக தெரிகிறது. வருகிற 20-ஆம் தேதி டைரக்டர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழு சென்னை திரும்புகிறது. சில தினங்கள் முன்னதாகவே, நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக சென்னைக்கு திரும்பி விட்டார் என்று குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.
விஜய் நடித்த கோட் படத்தை ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம், 52 கோடி ரூபாய்க்கு சாட்டிலைட் உரிமைக்காக விலை பேசி வாங்கியது. ஆனால் இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை வேண்டாம் என கூறிவிட்டனர். இதற்கு காரணம், விஜய் 69 படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன் வந்ததாகவும், அதற்கு விஜய் தரப்பில் மறுப்பு தெரிவித்து அந்த படத்தை நாங்களே தயாரித்துக் கொள்கிறோம் என்று கூறியதாகவும் தெரிகிறது.
இதனால் டென்ஷனான சன் பிக்சர்ஸ் நிறுவனம், கோட் படம் எங்களுக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டது. இதையடுத்து, ஜீ தமிழ் சேனலில் இந்த படத்தை சாட்டிலைட் உரிமத்துக்காக, அந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தினர் தரப்பில் பேசியுள்ளனர். ஆனால் கோட் படத்தை வாங்கும் அளவுக்கு, எங்களிடம் நிதியாதாரம் இல்லை என்று அவர்கள் மறுத்துவிட்டனர். அதன் பிறகு கலைஞர் டிவியில் பேசிய போது, நாங்கள் சில ஆண்டுகளாக சாட்டிலைட் உரிமத்துக்காக படங்கள் வாங்குவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விஜய் டிவியில் கோட் படம் குறித்து சாட்டிலைட் உரிமத்தை பெறுவதற்காக பேசப்பட்டுள்ளது. அப்போது ஜிவி பிரகாஷ் நடித்த கள்வன் படம் 7 கோடி ரூபாய்க்கு விஜய் டிவியில் சாட்டிலைட் உரிமை பெற்ற நிலையில், விஜய் நடித்த கோட் படத்துக்கு அதைவிட சில கோடிகள் மட்டும் கூடுதலாக வைத்து அவர்கள் விலை பேசி உள்ளனர். இப்படி அடிமாட்டு விலை பேசுவதை பார்த்து, அதிர்ந்து போன ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், கோட் படத்துக்கான சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவிக்கு தர மறுத்துவிட்டது. தொடர்ந்து பிற சேனல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.





