தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களுக்கு பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக நடிகர் சூர்யாவிற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சூர்யா திரைப்படங்களை இங்கு கொண்டாடுவது போல, பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் திருவிழா போல வரவேற்கின்றனர்.
அதுவும் ஆந்திர மாநிலத்தில் நடிகருக்கு செல்வாக்கு மிகப்பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு கூடிய கூட்டமே இதற்கு சாட்சி.
இதேபோல் தளபதி விஜய்க்கும் கேரளாவில் மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தமிழ்நாட்டில் அவரது திரைப்படங்களின் முதல் காட்சியை எப்படி ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ, அதற்கு ஒரு படி மேலேயே மலையாள ரசிகர்களின் கொண்டாட்டம் இருக்கும்.
குறிப்பாக கடைசியாக வெளிவந்த விஜயின் லியோ திரைப்படத்தை கேரளா ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என விருந்து படைத்து உற்சாகமடைந்தனர். இப்படியான சூழலில் விஜயின் அடுத்த திரைப்படமான கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடக்க இருப்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் எண்பது சதவீத பணிகள் முடிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், பிரபுதேவா பிரசாந்த் மைக் மோகன் சினேகா மீனாட்சி சவுத்ரி லைலா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது.
இந்த நிலையில் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பை, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மைதானத்தில் நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பிற்காக விஜய் அங்கு சென்றுள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் குவிந்தனர். விஜய் வரும் நேரம் பார்த்து அவர்கள் ஆரவாரம் செய்ததால் அந்த இடமே கோலாகலமாக காட்சியளித்தது. விஜய் வந்ததும் அவர்கள் உற்சாகத்தில் துள்ளி குதிக்க அவர்களைப் பார்த்து நடிகர் கை அசைத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





