தமிழ் சினிமா ரசிகர்களின் கேப்டனாக திகழ்ந்து வருபவர் விஜயகாந்த். ரஜினி, கமல் ஆகியோர் வளர்ந்து வந்த காலகட்டத்தில் தனி டிராக் போட்டு மக்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜயகாந்த். கலைவாணர், எம்.ஜி.ஆர், ஜெயசங்கர் ஆகியோரின் வரிசையில் கொடை வள்ளலாக திகழ்ந்தவர். இவரிடம் யார் உதவி என்று கேட்டாலும் அவருக்கு என்ன தேவையோ அதை செய்துகொடுத்துவிட்டே மறு வேலை பார்ப்பார்.

குறிப்பாக யாரும் பசியில் வாடினால் தாங்கிக்கொள்ள மாட்டார். உடனே அவரது பசியை போக்க என்ன வழி இருக்கிறதோ அதனை செய்வார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் இருக்கிறது. அதாவது விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது ஒரு கலைநிகழ்ச்சியை நடத்த தனி ரயிலில் சக நடிகர்கள் பலரையும் அழைத்துக்கொண்டு ரயிலில் பயணித்திருக்கிறார்.
வெளியூரில் நடைபெற்ற அந்த கலைநிகழ்ச்சி நடைபெற்று முடிந்த பிறகு சக நடிகர்களுடன் அதே தனி ரயிலில் சென்னைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது நடிகர்கள் யாரும் சாப்பிடவில்லை என்று தெரிந்துகொண்ட விஜயகாந்த், செயினை பிடித்து ரயிலை நிப்பாட்டினார். ரயிலில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று ஒரு ஹோட்டலை கண்டடைந்து அங்கிருந்த அனைத்து உணவு வகைகளையும் ஆள் வைத்து தூக்கிக்கொண்டு வந்தாராம். இந்த சம்பவத்தை நடிகர் சூர்யா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். இது அவரது கொடை தன்மைக்கு ஒரு சிறு உதாரணமே ஆகும்.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ஒருவர் தனக்கு விஜயகாந்துதான் பிடித்த நடிகர் என்று டிவிட் செய்துள்ளார். அவர் யார் என்பது குறித்தும் ஏன் அப்படி பதிவிட்டார் என்பது குறித்தும் இப்போது பார்க்கலாம்.
பாலிவுட்டில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருபவர் சோனு சூட். இவர் தமிழிலும் “சந்திரமுகி”, “ஒஸ்தி”, “சாகசம்” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த முதல் திரைப்படமே ஒரு தமிழ் திரைப்படம்தான். அத்திரைப்படத்தின் பெயர் “கள்ளழகர்”. இத்திரைப்படத்தில் விஜயகாந்த் கதாநாயகராக நடித்திருந்தார்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சோனு சூட்டிடம் “தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?” என்று ஒரு கேள்வியை டிவிட்டரில் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சோனு சூட், “விஜயகாந்த் சார்தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவர்தான் என்னை கள்ளழகர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார்” என்று கூறியுள்ளார். இந்த டிவிட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Vijaykanth sir.
He gave me my first break in a Tamil film …Kallalazagar. https://t.co/WCHMZjV0GA— sonu sood (@SonuSood) June 26, 2023





