கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார். அதே போல் மதுராந்தகம் தொகுதியிலும் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். அதிமுக எம்எல்ஏக்களாக அவர்கள் பதவியேற்றனர்.
இந்த நிலையில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 13 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. நடிகர் விஜய் முதல்வர் ஆனார். தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் பதவிகளும் கிடைத்தது. அதே போல் ஆதரவு தந்த விசிக காங்கிரஸ் முஸ்லிம்லீக் கட்சி எம்எல்ஏக்களும் அமைச்சரவையில் பங்கு பெற்றனர்.
இந்த சூழலில் 20 நாட்களே ஆன நிலையில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் அதிமுக எம்எல்ஏக்கள் சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகிய 2 பேரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக கட்சியில் இணைந்து விட்டனர். மேலும் இப்போது எம்எல்ஏ இல்லாத இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவித்த நிலையில் அவர்களே மீண்டும் தவெக சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இது மதுராந்தரம் தாராபுரம் தொகுதி மக்களின் மத்தியில் பெரிய அதிர்ச்சியை மட்டுமின்றி பதவிக்காக கட்சி மாறிய அவர்கள் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இடைத்தேர்தலில் அவர்கள் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுவது கடும் கோபத்தை தந்துள்ளது. ஒரு தொகுதியில் தேர்தல் நடத்த ரூ. 4 கோடி வரை மக்களின் வரிப்பணம் செலவாகிறது. அப்படி 2 தொகுதிகளில் ரூ. 8 கோடி மக்கள் வரிப்பணம் செலவான நிலையில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த காரணமே கட்சி மாறிய தவெக வேட்பாளர்கள் தான்.
தொகுதியில் எம்எல்ஏ இறந்து போனால் இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலையில், கட்சி மாறிய எம்எல்ஏக்களால் தான் இந்த திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தங்கள் தொகுதிகளுக்கு விசில் சின்னத்தில் ஓட்டு கேட்டு வரும் தவெக வேட்பாளர்களை ஆவேசமாக மக்கள் விரட்டியடித்து வருகின்றனர். துரோகியே வராதே, திரும்பிப் போ, பெட்டி வாங்கிய சத்யபாமா என்று எதிர்கோஷம் எழுப்பி தாராபுரம் தொகுதியில் பலத்த எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
இதனால் நேற்று தாராபுரம் தொகுதியில் பிரசாரம் செய்ய வந்த தவெக கட்சி பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த், பாதி பிரசாரத்திலேயே திரும்பி சென்றுள்ளார். மதுராந்தகதத்திலும் இதே போல் நடந்து அவர் பாதி வழியிலேயே பிரசாரத்தை முடித்திருக்கிறார். அதனால் தாராபுரம் தொகுதியில் தவெகவுக்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதால் கட்சி தலைவர் விஜய் அங்கு பிரசாரம் செய்ய வாய்ப்பில்லை. அவரது பிரசாரம் ரத்து செய்யப்படலாம் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





