தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என மீண்டும் நிரூபித்திருக்கிறார் தளபதி விஜய். விளிம்பு நிலையிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய அவர், இன்று மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் விஜய்க்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
தற்போது அவர் லியோ திரைப்படத்திற்குப் பிறகு கோட் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. ஆறு மாதங்களுக்கும் மேலாக இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. முதலில் டெல்லியில் இதன் படப்பிடிப்பை இயக்குனர் தொடங்கினார்.
பிறகு தாய்லாந்து அடுத்து துருக்கி ரஷ்யா பிறகு திருவனந்தபுரம் இலங்கை புதுச்சேரி என ஏராளமான இடத்தில் இதன் படபிடிப்பு நடத்தப்பட்டது. இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருப்பதும் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. குறிப்பாக லைலா பிரசாந்த் பிரபுதேவா சினேகா ஜெயராம் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதுபோக பிரேம்ஜி அமரன் வி டிவி கணேஷ் யோகி பாபு அஜ்மல் வைபவ் பார்வதி நாயர் மீனாட்சி சௌத்திரி என இந்த திரைப்படத்தின் நடிக்கும் நட்சத்திரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே விசில் பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது. படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாவதால் அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் சிவகார்த்திகேயனும் ஒரு காட்சிக்கு வருவதாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ஒரு காட்சியில் வருவது உறுதியாக இருக்கிறது. ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் இதனை வெங்கட் பிரபு சாத்தியமாகி இருக்கிறார். படத்தில் அவர் ஒரு நிமிடம் வருவார் என்று சொல்கிறார்கள்.
இந்த நிலையில் படத்தின் சேட்டிலைட் உரிமம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. வழக்கமாக விஜயின் திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியே கைப்பற்றும். ஆனால் இந்த முறை, ஜீ தொலைக்காட்சி இதனை வாங்கி இருக்கிறது. லியோ திரைப்படம் 80 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது கோட் படம் 93 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது. இதன் மூலம் தளபதி விஜய் மீண்டும் தன்னை வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்து இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.





