விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம், வீரதீர சூரன். நேரடியாக இரண்டாம் பாகமாக இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் அருண்குமார். ஒரே இரவில் நடைபெறுவது போன்று இந்த திரைப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தன. காளி என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் விக்ரம். எஸ் ஜே சூர்யாவும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பியிருந்தார்.
ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்ற இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்த விக்ரமுக்கு, இந்த திரைப்படத்தின் மூலம் ஒரு ஆறுதல் வெற்றி கிடைத்தது. இப்படியான சூழலில் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் விக்ரம் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
ஆனால் அது எதுவும் சூட்டிங் என்ற அளவுக்கே செல்லாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. முதலில் மடோன் அஸ்வின் உடன் தான் விக்ரம் இணைவதாக அறிவிக்கப்பட்டது. சத்தியஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே மண்டேலா மற்றும் மாவீரன் என இரண்டு ஹிட் திரைப்படங்களை அந்த இயக்குனர் கொடுத்திருந்ததால், இந்த காம்போ மிகச் சரியாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் கூறி வந்தனர்.
ஆனால் இந்த திரைப்படம் இன்னும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லவில்லை. பணிகள் தள்ளிப் போகிறது என்ற ஒரு பதில் மட்டும்தான் வந்து கொண்டே இருக்கிறது. இப்படியான சூழலில் திடீரென இயக்குனர் பிரேம்குமார் உடன் விக்ரம் இணைவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ஐசரி கணேஷ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
96 மற்றும் மெய்யழகன் என அற்புதமான இரண்டு திரைப்படங்களைக் கொடுத்த பிரேம்குமார், விக்ரமுடன் கைகோர்த்து இருப்பதால் அது குறித்து பரவலாக பேசப்பட்டது. இந்தத் திரைப்படம் ஆக்சன் திரில்லர் கதை களத்தில் எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இதற்கு முன்பு வரை, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த பிரேம்குமார் எப்படி ஆக்சன் கதையை கையாள போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இந்தத் திட்டமும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் தள்ளி வைக்கப்பட்டது. இப்படியான சூழலில் பாடல் ஆசிரியர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர் கவின் மற்றும் நயன்தாராவை வைத்து ஹாய் திரைப்படத்தை எடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்துதான் அவர் விக்ரமுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விக்ரம் நடித்த திரைப்படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுக்க இருப்பதாகவும் பேசுகிறார்கள்.





