கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்ததாக, தங்கலான் படத்தில் நடித்த முடித்திருக்கிறார். பா ரஞ்சித் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம், கோலார் தங்க வயலில் நடந்த உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திலான கதைக்களம் என்பதால், படக்குழுவினர் நிறைய மெனக்கெட்டு இருக்கின்றனர். கோலார் தங்க வயல் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், டிசம்பர் மாதம் படத்தை வெளியிட பா ரஞ்சித் திட்டமிட்டு இருக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ரஜினிகாந்த் உடன் இணையும் திரைப்படத்தில், வில்லன் கதாபாத்திரத்திற்கு விக்ரமின் அணுகினார்களாம். ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று கூறி நடிக்க மறுத்து விட்டாராம் விக்ரம்.
இது ஒரு பக்கம் இருக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் படம் என்ன ஆனது என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இன்னும் வெளியே வராமல் உள்ளது.
இதில் சிம்ரன், ரித்து வர்மா, ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், தொகுப்பாளர் டிடி, ஜெயிலர் படம் வில்லன் விநாயகம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசை அமைத்துள்ளார். ஜான் என்னும் கதாபாத்திரத்தில் இன்டர்போல் அதிகாரியாக விக்ரம் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாக இருந்தது. ஆனால் டிஜிட்டல் உரிமத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதன் நடுவே ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகளையும் படக்குழு வெட்டி எறிந்தது. இதில் துருவ நட்சத்திரத்தின் பணிகள் அனைத்தும் முடிந்திருப்பதாகவும், படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கார்த்தியின் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது தீபாவளி ரேசில் துருவ நட்சத்திரமும் இணைந்துள்ளது.





