நீ பெரியவனா நான் பெரியவனா என்ற ஈகோ சண்டை ஒரு வீட்டுக்குள் வந்துவிட்டாலே அந்த வீடு போர்க்களமாகி விடுகிறது. குடும்ப உறவுகள் சிதிலமடைந்து சின்னாபின்னமாகி போய் விடுகிறது. குடும்ப வாழ்க்கையே அஸ்தமித்து விடுகிறது. இதுவே இரண்டு நாடுகளுக்குள் ஏற்பட்டு போர் ஆக மாறினால் அந்த நாடுகளின் வாழும் மக்களின் நிலையும் வாழ்க்கையும் என்னாவது என்கிற பதட்டம் இப்போது இஸ்ரேல் ஈரான் இடையே நீடிக்கிறது.
எந்த ஒரு பிரச்னைக்குமே வன்முறை தீர்வு அல்ல என்று கூறப்படும் இதே உலகத்தில் தான் போர் என்ற பெயரால் ஒரு வலிமையான நாடு வலிமை இல்லாத நாட்டை அழிக்கிறது. குண்டுகள் போட்டு தகர்க்கிறது. ஏவுகணைகளால் கட்டடங்களை நொறுக்கி சிதைக்கிறது. மக்களின் வாழ்விடங்கள் தீப்பிழம்புகளாக மாறி எரிந்து சாம்பலாகின்றன.
இப்போது இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் நடந்து வரும் போர் குறித்து கவிஞர் வைரமுத்து தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது, போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்து விடும். மனிதர்களின் தோள் வலிமையைத் தாண்டித் தொழில் நுட்பப் பிசாசுகளின் கைகளுக்கு இடம் பெயர்ந்துவிட்டது போர். அணு ஆயுத அழிவுகள் அனுமானிக்க முடியாதபடி இருக்கும்.
பைத்தியக்காரன் இழுக்கும் நேர்கோடு எப்போதும் நேராக வாராது; போரும் அப்படித்தான். நமது சாப்பாடும் தூக்கமும் ஏதோ ஒரு நாட்டின் நகர்வோடு முடிச்சுப் போடப்பட்டு விட்டது. ஈரானின் “ஹோர் முஸ்” நீரிணை மூடப்பட்டு விட்டால் தெற்காசியாவின் ரத்தஓட்டமே சீர்கெட்டுப் போகும்
ஒவ்வொரு வீட்டு உண்டியலும் களவாடப்படும். மூளும் போர் நீளும் போராக இல்லாமல் நிறுத்தப்பட வேண்டும். ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் நாற்காலிகளில் ஏறி நின்று பேசவேண்டும். ‘போர் ஒழிக’ இல்லையேல் ஒவ்வொரு நாட்டுச் சூரியனும் மூடப்படும்.
தொலைக்காட்சிகளின் போர்க் காட்சிகளை வாண வேடிக்கையென்று காண வேண்டாம் யாரும். அதுவே சொந்த வீதியில் நடந்தால் என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள். எல்லா மனிதரும் போருக்கு எதிரான பதாகையாக வேண்டும் என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து போர் குறித்த தனது வேதனையாக கவிதை வரிகளில் தெரிவித்துள்ளார்.





