மலையாளம் தமிழ் தெலுங்கு இந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் பைரவா சர்கார் அண்ணாத்த சாமி 2 நடிகையர் திலகம் ரஜினி முருகன் ரெமோ சைரன் 108 ரகுதாத்தா உள்ளிட்ட பல படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். சமீபத்தில்தான் தனது காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துக்கொண்டார்.
நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார். இவர் மலையாளத்தில் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார். இவரது மனைவி, அதாவது கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவும் ஒரு நடிகைதான். தமிழில் மலையாளத்தில் கடந்த 1980களில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிக்கு நெற்றிக்கண் படத்தில் காதலியாக நடித்திருந்தார்.
மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் சுரேஷ்குமார் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். சங்க நிர்வாகியான சுரேஷ்குமார், கடந்த சில ஆண்டுகளாக மலையாள சினிமாவில் நடிகர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது அதிக சம்பளம் உயர்வால் மலையாள சினிமா தள்ளாடி வருகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார்.
வரும் மே மாதம் முதல் மலையாள திரையுலகில் புதிய படங்களை தயாரிக்கப் போவதில்லை என்றும் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக சுரேஷ்குமார் சமீபத்தில் அறிவித்தார். அது மட்டும் இன்றி நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதாலும் தங்களது படங்களை அவர்களே 100 கோடி ரூபாய் வசூல் என விளம்பரப்படுத்தி கொள்வதாலும் தயாரிப்பாளர்களுக்கு தான் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் நடிகர்களே சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து படம் தயாரிப்பது ஆபத்தான ஒரு நிலையாக உள்ளது என்றும் சுரேஷ்குமார் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்.
பொதுவாக அவ்வப்போது ஏதாவது பிரச்னைகளை இழுத்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன், கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ்குமாரின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு கருத்தை தற்போது வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து நடிகர் விநாயகன் வெளியிட்டுள்ள பதிவில், சினிமா என்பது உங்களுடைய குடும்ப சொத்தா என்ன, நீங்கள் இதை உங்கள் மனைவியிடமும் பிள்ளைகளிடம் சொல்லி படங்களில் நடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.
நான் ஒரு நடிகன். நான் விரும்பினால் என்னால் படம் தயாரிக்கவும் இயக்கவும் விநியோகம் செய்யவும் படங்களை திரையிடவும் முடியும். இது இந்தியா, ஜெய்ஹிந்த் என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார். இவர் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்தவர். படத்தில் சில காட்சிகளில் ரஜினியை மிரட்டுபவராக நடித்தவர். மேலும் சிலம்பாட்டம் திமிரு போன்ற படங்களிலும் வில்லன் கேரக்டரில் விநாயகன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





