எப்போதுமே பிரபலமாக இருக்கும் சிலர் வித்யாசமான கோணங்களில் சிந்திப்பார்கள். வாழ்க்கையில் சகல இன்ப துன்பங்களையும் கடந்து வந்த அவர்களுக்கு திடீரென வினோதமான எண்ணங்களும் விசித்திரமான கற்பனையும் தோன்றும். அதிலும் எழுத்தாளர் ஜெயகாந்தன் மாறுபட்ட சிந்தனை கொண்ட ஒரு படைப்பாளி.
எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிட்ட ஊருக்கு செல்ல ரயில் டிக்கெட் எடுத்துவிட்டு இடையிடையே வரும் ஸ்டேஷன்களில் இறங்கி அங்குள்ள பெஞ்சில் அமர்ந்து விடுவார். ரயில் நிலையங்களில் வந்து செல்லும் மக்களின் முகங்களை, அவர்களது தோற்றங்களை மானரிசங்களை பார்த்து தனது நாவலில் வரும் கேரக்டர்களை வர்ணிப்பது அவரது வழக்கமாக இருந்துள்ளது.
அதே போல் நடிகர் நாகேஷூம் ஒரு திரைக்கலைஞராக இருந்தாலும் வித்யாசமான சிந்தனைகளை கொண்டவர். எப்படிப்பட்ட சூழலையும் எதிர்கொள்ளும் ஒரு மனவலிமை மிக்கவர். அப்படி ஒரு சம்பவம் நாகேஷ் ஜெயகாந்தன் நாகேஷ் இருவருக்கும் நடந்துள்ளது. ஒருமுறை எழுத்தாளர் ஜெயகாந்தனும் நடிகர் நாகேஷூம் வெளியூரிலிருந்து காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது தொழுப்பேடு என்ற ஊரில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. ரயில் வந்து செல்ல நேரமாகும் என்று அங்கிருந்த சிலர் கூறினர். அதுவரை என்ன செய்வது பொழுதை எப்படி போக்குவது என்று நாகேஷ் ஜெயகாந்தனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். உடனே பிச்சை எடுக்கலாம் என்று ஜெயகாந்தன் கூறியிருக்கிறார்.
அப்படியா? அதுவும் சரிதான். ஆனால் இப்படியே போய் பிச்சை எடுத்தால் யார் நம்புவார்கள் என்று திருப்பிக் கேட்ட நாகேஷ் காரில் இருந்த லுங்கியை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ரோட்டோரத்தில் போய் உடனே உட்கார்ந்து விட்டார். இதை பார்த்து மிரண்ட ஜெயகாந்தனும் அதே கோலத்தில் பிச்சைக்காரன் போல நாகேஷ் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்.
அந்த வழியாக போவோர் வருபவர்களிடம் எல்லாம் இரண்டு பேரும் கைநீட்டி பிச்சை எடுத்தனர். அந்த பிச்சையில் ஜெயகாந்தனுக்கு தான் நிறைய வசூல் கிடைத்திருக்கிறது. இதில் நீதான் ஜெயிச்சே என்று ஜெயகாந்தனை நாகேஷ் கட்டிப்பிடித்துக் கொண்டு பாராட்டினார் என்று மூத்த சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.





