களத்தூர் கண்ணம்மா படம் மூலம் 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் வந்தவர் நடிகர் கமல்ஹாசன். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் போன்ற ஜாம்பவான் நடிகர்களுடன் நடித்தவர். அவர்களது தோள் மீதும் மடி மீதும் தவழ்ந்து விளையாடி சினிமாவில் வளர்ந்தவர். இப்போது தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்கள் என்றால் அது ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவர் மட்டும்தான்.
நடிகர் கமல்ஹாசனை பொருத்த வரை சினிமா, அரசியல் என்ற 2 தளங்களில் ஒரே நேரத்தில் பயணித்து வருகிறார். ஆனால் அரசியலில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பும் ஆதரவும் கிடைக்கவில்லை. மக்கள் அரசியல்வாதியாக அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மை. ஆனால் நடிகராக இன்னும் ரசிகர்கள் கமல்ஹாசனை கொண்டாட தயாராகவே இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்து பேசி களத்தில் இறங்கிய கமல்ஹாசன், அரசியல் சூதாட்டங்களை தாக்குப்பிடிக்க முடியாமல் கடைசியில் திமுகவிடமே தஞ்சம் அடைந்ததை அவரை சார்ந்தவர்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த பல முக்கிய பொறுப்பாளர்கள் கட்சியை விட்டே வெளியேறி விட்டனர். அதே போல் கமலும் அரசியலை விட்டே வெளியேறினால் அவரது சினிமா ரசிகர்கள் ரொம்பவும் சந்தோஷப்படுவர்.
ஏனெனில் இனி அரசியலில் எம்பி எம்எல்ஏ அமைச்சர் பதவிக்கு வந்துதான் கமல்ஹாசனுக்கு பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என்ற நிலை இல்லை. ஒரு திரைக்கலைஞனாக அவர் எட்டாத சிகரங்கள் இல்லை. அடையாத புகழ் இனி இல்லை. எனவே, சினிமாவில் செய்த சாதனைகளே அவரது பெயரை காலம் காலமாக சொல்லிக்கொண்டே இருக்கும்.
இந்நிலையில் சமீபகாலமாக பல இளம் ஹீரோக்கள் கமல் நடிக்கும் படங்களில் அவருக்கு வில்லன் ரோல் செய்ய மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடித்திருந்தார். சூர்யாவும் அதில் கிளைமாக்ஸில் வில்லனாக வந்தார். அதே போல் தக்லைஃப் படத்திலும் கமல் சிம்பு ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சிகள் டிரெய்லரில் வந்திருக்கின்றன.
ஆரம்ப காலத்தில் கமல் ஹீரோவாக நடித்த போது அவருடன் பல படங்களில் வில்லனாக மோதியவர்கள் தான் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ் போன்றவர்கள். பின்னால் அவர்களே பெரிய ஹீரோ நடிகர்களாக மாறிவிட்டனர். அந்த சென்டிமென்ட் காரணமாக இப்போதும் கமலுக்கு வில்லனாக அவரது படங்களில் நடிக்க பல இளம் ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கமல் படங்களை இயக்கும் இயக்குனர்களிடம் வில்லன் கேரக்டர் கேட்டு சில இளம் நடிகர்கள் நச்சரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது,





