தனியார் தொலைக்காட்சியில் அது இது எது நிகழ்ச்சியை இயக்கி வந்த நெல்சன், 2010 ஆம் ஆண்டு வேட்டை மன்னன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இயக்குனராக அறிமுகமானார். சிம்பு, ஜெய், ஹன்சிகா மோத்வானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம், பல்வேறு பிரச்சினைகளால் பாதியில் நின்று போனது.

இதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இயக்கத்திற்கு திரும்பிய நெல்சன், நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை எடுத்தார். இந்தத் திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற, அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தையும் எடுத்தார். டார்க் காமெடி ரகத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், வெற்றி பெற சிவகார்த்திகேயனுக்கு முதன்முறையாக 100 கோடி ரூபாய் வசூலை கொடுத்தது.
டாக்டர் திரைப்படத்தை இயக்கும் போது இயக்குனர் நெல்சனுக்கு, விஜயுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் விஜய் கூட்டணியில் உருவான பீஸ்ட் திரைப்படம், கலவையான விமர்சனங்களால் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து, ரஜினியுடன் இணைந்த நெல்சன், ஜெயிலர் திரைப்படத்தை உருவாக்கினார்.

கடந்த 10 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, விநாயகம், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இதில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருக்கு தனி தனி மாஸ் காட்சிகளை வைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நெல்சன்.
முன்பதிவு தொடங்கி தற்போது வரை ஜெயிலர் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் மேலாக ஜெயிலர் படம் வசூலித்துள்ளது. இது மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஜெயிலர் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
ஜெயிலர் பட வெற்றியால் உற்சாகமடைந்துள்ள நெல்சன், சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறியிருக்கிறார். இது மட்டுமல்ல தனது முந்தைய திரைப்படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க நெல்சன் திட்டமிட்டுள்ளாராம். ஜெயிலர், டாக்டர் படங்கள் எல்லாம் ஓகே, ஆனால் பீஸ்ட் படத்திலிருந்து இரண்டாம் பாகத்தை எடுக்க ஏன் வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் பதறிப் போய் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





