காதல் படமாக இருந்தாலும் சரி ஆக்சன் படமாக இருந்தாலும் சரி அதனை வெற்றி திரைப்படம் ஆக்கும் சூட்சமம் தெரிந்தவர்தான் இயக்குனர் கௌதம் மேனன். அவரது இயக்கத்தில் வெளியான மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இங்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இப்படியான சூழலில் தற்போது மலையாளத்திற்கு நேரடியாக ஒரு படத்தை எடுக்க சென்று விட்டார் கௌதம் மேனன். மம்முட்டியை வைத்து அவர் டாமினிக் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த மாத இறுதியில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதில் மம்முட்டி ஒரு தனியார் துறையை சேர்ந்த துப்பறிவாளராக நடிக்கிறார்.
இதைத் தொடர்ந்து கௌதம் மேனன் அடுத்ததாக யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றி விழாவில் இதற்கான பதில் கிடைத்திருக்கிறது.
அந்தத் திரைப்படத்தின் நாயகன் விஷால் மேடையில் பேசும் போது, தனது அடுத்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்குவதாக தெரிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இருவரும் இணையும் திரைப்படம் குறித்த தகவல்கள் தற்போது கசிந்து உள்ளன. அதன்படி கௌதம் மேனன் விஷால் ஆகியோர் இணையும் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்க இருக்கிறாராம்.
கௌதம் மேனன் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயை வைத்து யோகான் அத்தியாயம் ஒன்று என்னும் திரைப்படத்தை இயக்க இருந்தார். இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதில் வெளிநாடுகளில் விஜய் இருப்பது போலவும், கோட் சூட் அணிந்து கையில் துப்பாக்கி வைத்திருப்பது போலவும் காட்சிகள் இருந்தன. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திரைப்படம் கைவிடப்பட்டது.
தமிழுக்கு ஏற்றது போல் இதன் கதை இல்லை என்றும், ஆங்கிலம் திரைப்படம் போல் இது இருப்பதாகவும் கூறி விஜயை இந்த திரைப்படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக கௌதம் மேனன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இப்படியான சூழலில் தான், அந்த யோகான் திரைப்படத்தை விஷாலை வைத்து கௌதம் மேனன் இயக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. இதற்காக படத்தின் கதையில் அவர் சில மாற்றங்களை செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





