நடிகர் விஷால் துவக்கத்தில் ஒரு நல்ல கலைஞராக, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல நல்ல படங்களை தந்தார். குறிப்பாக சண்டக்கோழி, துப்பறிவாளன், திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, அவன் இவன், நான் சிவப்பு மனிதன், பாண்டியநாடு போன்ற பல படங்களில் விஷால் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது. காதல், காமெடி, ஆக்சன் ஹீரோவாக அசத்தினார்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு விஷால் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. அவரது படங்களில், அவர் நடிப்பு சிறப்பாக இருந்தும் கதை அம்சம், நன்றாக இல்லாததால் திரைக்கதை சொதப்பியதால் பல படங்கள் மிக மோசமாக தோல்வியடைந்தன.
எனினும் கடந்தாண்டில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் ஒரு மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்து. அந்த படம் விஷாலுக்கு கம்பேக் படமாக அமைந்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்தவர் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா தான் என்பதையும் மறுக்க முடியாது.
சமீப காலமாக நடிகர் விஷால் அடிக்கடி பரபரப்பான விஷயங்களை செய்து கோலிவுட் கவனமும், ரசிகர்கள் பார்வையும் தன் மீது இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார். சில தினங்களுக்கு முன், வருகிற 2026 சட்டசபை தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இருக்கும் என்று அதிரடியாக அறிவித்தார். இதன் மூலம் வரும் 2026 சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடுகிறார் என்பதை நேரடியாக அரசியல் வருகையை தெரிவித்தார். நேற்று நடிகர் விஜய் போல சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். நடிகர் விஜயை, விஷால் காப்பியடிப்பதாக பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் படம் வரும் 26ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அப்போது சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படமும் ரிலீஸ் ஆகிறது. இப்படி தனது படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில், சுந்தர் சி இயக்கிய படத்தை வேண்டும் என்றே ரிலீஸ் செய்வதாக ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் மீது, அமைச்சர் உதயநிதி மீது விஷால் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே அரண்மனை 4 பட டைரக்டர் சுந்தர் சியை அழைத்துப் பேசிய விஷால், என் படம் தனியாக வந்தால் நன்றாக இருக்கும். உங்கள் படம் வெளியாகும் நாளை மாற்ற முடியுமா என்று கேட்டிருக்கிறார். உடனே அவர் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏசி சண்முகம்தான். அவரிடம் பேசுங்கள் என்று கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து, அரண்மனை 4 ரிலீஸ் வரும் மே 3ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கவின் நடித்த ஸ்டார் படம் மே 3ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில், அந்த படம் மேலும் ஒரு வாரம் தள்ளிப் போய் மே 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படி பல அலப்பரைகளை செய்து வருகிறார் விஷால்.





