தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படம்தான் விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமான முதல் படம். நடிகர் சூரிக்கும் பரோட்டா காட்சி மூலம் பெயர் வாங்கி தந்த படமும் இதுதான். கபடி விளையாட்டை மையப்படுத்திய கதைக்களத்தில் இந்த படம் இருந்தது.
வெண்ணிலா கபடிக்குழு படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக பலே பாண்டியா குள்ளநரிக்கூட்டம் நீர்ப்பறவை முண்டாசுப்பட்டி மாவீரன் கிட்டு இன்று நேற்று நாளை சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ராட்சசன் கட்டாகுஸ்தி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் விஷ்ணு விஷால் நடித்தார்.
நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் விஷ்ணு விஷால் சில படங்களை தயாரித்திருக்கிறார். இப்போது அவரது தயாரிப்பில் உருவான ஓஹோ எந்தன் பேபி என்ற படத்தில் அவரது சொந்த தம்பி ருத்ரா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை திருடா திருடி படத்தில் தனுஷின் அண்ணனாக நடித்த கிருஷ்ணா டைரக்ட் செய்திருக்கிறார்.
4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த தனது முதல் மனைவி ரஜினியை விஷ்ணு விஷால் விவாகரத்து செய்த நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை 2வது திருமணம் செய்துக்கொண்டார். இதுவும் காதல் திருமணம்தான். இந்த தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான், மிரா என பெயர் சூட்டியதும் இணையத்தில் வைரலானது.
அடுத்தாக ராட்சசன் 2 மற்றும் கட்டாகுஸ்தி 2 படங்கள் உருவாக இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருப்பதாகவும் சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார். மேலும் தனது தம்பி ருத்ரா நடிப்பில் வெளியாகும் ஓஹோ எந்தன் பேபி படத்தின் தயாரிப்பாளராக பிரமோ நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார். அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் இரண்டு வானம் ஆர்யன் என 2 படங்கள் ரிலீஸாக உள்ளன.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது, விஜய் ஆண்டனி நடித்த நான், பரத் நடித்த காதல் ஆகிய படங்களில் நான்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் நான் அந்த படங்களில் இருந்து திடீரென நீக்கப்பட்டேன். அதே போல் வெங்கட்பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் ஆடிஷனில் நான் கலந்துக்கொண்டேன். இப்படி 7 ஆண்டுகள் நான் தமிழ் சினிமாவில் புறக்கணிக்கப்பட்டேன். அதன்பிறகுதான் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று கூறியிருக்கிறார்.





