ஒரு காலத்தில் இயக்கத்தில் கொடிகட்டி பறந்த கௌதம் மேனன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது இயக்கத்திற்கு என தனி ரசிகர் பட்டாளம் இங்கு உள்ளது. மின்னலே திரைப்படத்தில் ஆரம்பித்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என கிளாசிக் திரைப்படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன்.
விக்ரமை வைத்து அவர் துருவ நட்சத்திரம் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதன் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார். ஆனால் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக அந்த திரைப்படம் இப்போது வரை திரையரங்குகளில் வெளிவரவில்லை.
இதனால் கௌதம் மேனனுக்கும் கடன் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருவதாக சிலர் கூறுகிறார்கள். இருப்பினும் அவ்வப்போது அவர் இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். சிம்புவை வைத்து அவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இது நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் வெற்றியும் பெற்றது. ஒரு சாதாரண இளைஞன் எப்படி கேங்ஸ்டர் ஆகிறான் என்பதை தனக்கே உண்டான இயக்கத்தில் சூப்பராக சொல்லி இருந்தார் கௌதம் மேனன். இதன் பிறகு அவர் மலையாள நடிகர் மம்முட்டியை வைத்து நேரடியாக மலையாளத்தில் ஒரு திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
ஆனால் இது பெரிய அளவு ரீச் ஆகவில்லை. இது ஒரு பக்கம் இருக்க தனது நடிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்திலும் அவர் இடம் பெற்றுள்ளார். அண்மையில் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாக, அதில் பலரும் கௌதம் மேனனைதான் கவனித்தார்கள். காக்க காக்க திரைப்படத்தின் உயிரின் உயிரே பாடலுக்கு அவரே கடற்கரையில் ஓடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இப்படியான சூழலில் அந்த திரைப்படத்தில் நடித்திருந்த, சந்தானத்தை வைத்து கௌதம் மேனன் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக எடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் சந்தானத்தை வைத்து காதல் திரைப்படமா என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





