சினிமாத் துறையில் அட்ஜெஸ்ட்மென்ட் என்ற வார்த்தை இப்போது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. புதிதாக நடிக்க வரும் இளம் பெண்களை அட்ஜெஸ்ட் செய்தால்தான் வாய்ப்பு என்று கூறி பாலியல் ரீதியாக சுரண்டும் கொடுமைகள் பல நடந்து வருவதாக சினிமாத் துறையை சேர்ந்த பல பெண்கள் புகார்களை அடுக்கி வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகையான விஜே தீபிகா, ராகவா லாரன்ஸ் படத்தின் ஆடிஷனின் போது இது போன்ற ஒரு பிரச்சனையை சந்தித்திருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரீயலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே தீபிகா. “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மிக பிரபலமான சீரீயலாக மக்களின் மத்தியில் வலம் வருகிறது. இதன் மூலம் விஜே தீபிகாவும் மிக பிரபலமாக அறியப்பட்டார்.
இந்த நிலையில் விஜே தீபிகா சமீபத்தில் ராகவா லாரன்ஸ் திரைப்படத்திற்கான ஆடிஷன் ஒன்றில் கலந்துகொண்டாராம். அப்போது அத்திரைப்படத்தின் இயக்குனர், “ராகவா லாரன்ஸிற்கு ஒரு தங்கை கதாபாத்திரம் இருக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் கச்சிதமாக இருப்பீர்கள். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு முத்த காட்சி இருக்கிறது. ஆதலால் அந்த முத்த காட்சியில் இப்போது நடித்துக் காட்டுங்கள். எனக்கு முத்தம் கொடுங்கள்” என்று கூறினாராம்.

இயக்குனர் இவ்வாறு பேசியதை கேட்டதும் தீபிகாவிற்கு ஷாக் ஆகிவிட்டதாம். “எனக்கு இந்த பட வாய்ப்பு வேண்டாம்” என்று கூறியிருக்கிறார். அதற்கு அந்த இயக்குனர், “நானும் லாரன்ஸும் நெருங்கிய நண்பர்கள்தான். நான் சொன்னால் அவர் கேட்டுக்கொள்வார். அந்த முத்த காட்சியை கூட படத்தில் இருந்து தூக்கிவிடலாம். நீங்கள் இந்த படத்தில் நடியுங்கள்” என கூறினாராம்.
அதன் பின் தீபிகா, “வேறு எதாவது காட்சி இருந்தால் சொல்லுங்கள், நான் நடித்துக் காட்டுகிறேன்” என்று சொல்ல, அதற்கு அந்த இயக்குனர், “இதற்கு முன் பல பெண்களை இந்த கதாபாத்திரத்திற்கு ஆடிஷன் எடுத்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் எனக்கு முத்தம் கொடுத்தார்கள். நீங்கள் மட்டும் முத்தம் கொடுக்காமல் உங்களை தேர்வு செய்துவிட்டால் அந்த பெண்களுக்கு துரோகம் செய்வது போல் ஆகிவிடும். ஆதலால் எனக்கு முத்தம் கொடுத்துவிடுங்கள்” என்று வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல் திரும்பவும் அந்த பாய்ண்ட்டுக்கே வந்தாராம். அதன் பின் தீபிகா அந்த இயக்குனரை முறைத்துப் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.





