லியோ படம் ஷூட்டிங் துவங்கியதில் இருந்தே பலவிதமான அப்டேட்டுகள் வந்துக்கொண்டே இருந்தன. இதில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படங்களுக்கு பயங்கர எதிர்ப்பும் கிளம்பியது. அதே வேளையில் படத்தில் கேமியோ, எல்சியு போன்றவை குறித்த தகவல்களும் வைரலாகி கொண்டே இருந்தன.
இந்த படத்தின் விக்ரம், கைதி படங்களின் கேமியோ வருகிறது. ரோலக்ஸ் சூர்யா வருகிறார். கமல் நடிக்கிறார் என ஏகப்பட்ட வதந்திகள் பரவிய நிலையில், அதையெல்லாம் படத்துக்கான பிரமோசனாக, படக்குழு கைகட்டி வேடிக்கை பார்த்தது. ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பு, படம் ரிலீஸ் ஆகும்போது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என படக்குழு யோசித்து பார்க்கவில்லை.
இதையெல்லாம் விட, லியோ படத்தின் ரிலீஸ் மூலம், கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தியேட்டர் ஓனர்கள்தான். அதாவது, வழக்கமாக 50க்கு 50க்கு என்ற பார்மூலாவின் படி தியேட்டர் வசூல், விநியோகஸ்தர்களுக்கு தருவதுதான் வழக்கம். ஆனால், இந்த படத்துக்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் தரப்புக்கு டிக்கெட் வசூலில் 75 முதல் 80 சதவீதம் வரை பங்கு தர வேண்டும் புதிய நிபந்தனை பலத்த நெருக்கடியை தந்துவிட்டது.
இதுகுறித்து, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தமிழ்நாடு மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் படம் வரும்போது, தியேட்டர் ஓனர்கள் மகிழ்ச்சியாக இருப்போம். ஆனால், லியோ படத்தை திரையிட்ட தியேட்டர் ஓனர்களுக்கு இந்தமுறை மகிழ்ச்சி இல்லை. எந்த லாபமும் கிடைக்கவில்லை.
ஏற்கனவே, பல்வேறு தொழில் பாதிப்புகளில், நெருக்கடியில் இருக்கும் தியேட்டர் ஓனர்கள் கழுத்தில் கால் வைத்து மிதித்துவிட்டனர். அதுதான் லியோ படம் ரிலீஸில் நடந்திருக்கிறது. 190 ரூபாய்க்கு டிக்கெட் விற்றால், 35 ரூபாய்தான் எங்களுக்கு வருகிறது. 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தியேட்டர் வசூலில் தந்துவிட்டால், நாங்கள் எப்படி தியேட்டர்களை நடத்த முடியும்?
தீபாவளி வரை வேறு படங்கள் ரிலீஸ் இல்லை. லியோ படத்தை போடாவிட்டால், தியேட்டரை இழுத்து மூடி பூட்டி தான் வைக்க வேண்டும். வேறு வழியின்றி தான் லியோ படத்தை போட்டிருக்கிறோம். இந்த நிபந்தனைப்படி படத்தை திரையிட மாட்டோம் என தியேட்டர் ஓனரகள் கடைசி வரை போராடியும், தயாரி்ப்பாளர், விநியோகஸ்தர்கள் தரப்பில் ஒத்துக்கொள்ளவில்லை. தீபாவளிக்கு புதிய படங்கள் வந்தால், லியோ பெரும்பாலான தியேட்டர்களில் இருக்காது. மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஓரிரு ஸ்கிரீன்களில் ஓடும். மேக்சிமம் ஆடியன்ஸ் லியோ பார்த்துவிட்டனர், என்றார்.





