வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அதிகார வர்க்கத்திற்கு எதிரான வாழ்வியல் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் இதன் சூட்டிங்கை நடத்தி இருந்தார் வெற்றிமாறன். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில், இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முதல் பாகத்தில் சூரியை சுற்றியே கதை நகர்வது போல் காட்சிப்படுத்தியிருந்தார் வெற்றிமாறன்.
குமரேசன் என்னும் கதாபாத்திரத்திலேயே வாழ்ந்த சூரி, ஒவ்வொரு அசைவிலும் நம்மை ஆச்சரியப்படுத்தி இருந்தார். எந்த ஒரு இடத்திலும் அவர் நகைச்சுவை நடிகர் சூரி என்ற ஞாபகமே ரசிகர்களுக்கு வரவில்லை. அந்த அளவுக்கு சூரியின் எதார்த்தமான நடிப்பை கண்டுபிடித்து, ரசிகர்களுக்கு கொடுத்து இருந்தார் வெற்றிமாறன்.
ஜெயமோகனின் துணைவன் என்னும் நாவலை தழுவியே இந்த திரைப்படம் எடுக்கும் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கதையின் மைய பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு, தனக்கு ஏற்றார் போல் பல்வேறு மாற்றங்களையும் செய்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். ரசிகர்களை எப்போதும் அவரது திரைப்படங்கள் ஏமாற்றமடைய செய்வதில்லை என்பதற்கு மற்றும் ஒரு உதாரணமாக விடுதலை திரைப்படம் அமைந்தது.
இந்த நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம், கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மேலாக எடுக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள வனப்பகுதியில் இதன் சூட்டிங்கை நடத்தினார் வெற்றிமாறன். இதில் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சுவாரியரை அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இதன் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள், கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். தற்போது தென்காசி மாவட்டத்தில், இறுதி கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்திலிருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு மிக முக்கிய கதாபாத்திரத்தை வெற்றிமாறன் கொடுத்திருக்கிறாராம். அவர் கேமியோ ரோலில் வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.





