நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கூலி. இந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் பலத்த ஏமாற்றத்தை சந்தித்தது. ரஜினி லோகேஷ் கனகராஜ் அனிருத் கூட்டணி பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால் படம் சொதப்பி விட்டது. சத்யராஜ் உபேந்திரா அமீர்கான் நாகர்ஜூனா என பல நட்சத்திர நடிகர்கள் இருந்தும் படத்தை கரை சேர்க்க முடியவில்லை.
கூலி படத்தில் மோனிஷா பாடலுக்கு நடனமாடிய நடிகை பூஜா ஹெக்டேவும் வில்லன் கேரக்டரில் நடித்த செளபின் சாஹிர் மட்டும் தான் படத்தை ஓரளவுக்கு தாங்கி பிடித்தனர். ஆனாலும் இந்த படம் வசூல் ரீதியாக லாபத்தை தந்தாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய மொக்கை படம் என்பதில் ரஜினி ரசிகர்களுக்கே மாற்றுக் கருத்து இல்லை.
இந்த நிலையில் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. கொச்சினில் நடந்து வரும் பேட்ச் ஒர்க் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை கொச்சின் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் பங்கேற்கும் இந்த படப்பிடிப்புடன் ஜெயிலர் 2 ஷூட்டிங் நிறைவடைய உள்ளது.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது. நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த அதே அரங்கத்தில் இந்த விழாவும் நடக்க உள்ளதாக ஒரு தகவல் கடந்த வாரத்தில் பரவியது.
ஆனால் அது உண்மையில்லை. யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்றும் கூறப்பட்டது. ஆனால் இன்றைய லேட்டஸ்ட் தகவலின்படி அதற்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டதாக தெரிய வந்துள்ளது. ஜனநாயகன் பட விழாவை மலேசியாவில் ஏற்பாடு செய்த முக்கிய நிர்வாகி மாலிக் என்பவர், சமீபத்தில் சென்னை வந்து சன் பிக்சர்ஸ் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அவரிடம் ஜனநாயகன் பட விழாவை போல ஜெயிலர் 2 பட விழாவை அங்கு நடத்த சன் பிக்சர்ஸ் தரப்பில் பேசப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை அந்த முக்கிய நிர்வாகி மாலிக் மலேசியாவில் மேற்கொள்ள இருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. ரஜினி பங்கேற்கும் விழா என்றாலே சன் டிவியில் 2 முதல் 3 வாரங்கள் வரை ஞாயிறு தோறும் ஒளிபரப்பு செய்வது சன் டிவியின் வழககம். அதற்காகவே இந்த விழாவை மிக பிரமாண்டமாக மலேசியாவில் நடத்த சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.





