தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் சேரன். பாரதி கண்ணம்மா பொற்காலம் வெற்றிக்கொடி கட்டு பொக்கிஷம் தேசியகீதம் ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து போன்ற நல்ல படங்களை தந்து ரசிகர்களிடம் வெற்றி பெற்றவர். பல படங்களில் அவரே நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
கடந்த 2004ம் ஆண்டில் சேரன் இயக்கத்தில் வெளியான படம் ஆட்டோகிராப். பள்ளி வாழ்க்கை கல்லூரி வாழ்க்கை தொழில் வாழ்க்கை என கடந்த கால வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் காதல்களை சொன்ன படமாக இது இருந்தது. இதில் சேரனே நாயகனாக நடித்திருந்தார்.
மல்லிகா கோபிகா சினேகா கனிகா மற்றும் ராஜேஷ் இளவரசு பெஞ்சமின் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. பள்ளி கல்லூரி நாட்களில் ஏற்படும் காதல் உணர்வுகளை சொல்லும் படமாக இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையடுத்து 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்டோகிராப் படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தை டிஜிட்டல் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தில் பொலிவு செய்து மீண்டும் திரைக்கு கொண்டு வருகிறார் இயக்குனர் சேரன். ஆட்டோகிராப் படத்தில் 20 நிமிட காட்சிகளையும் அவர் குறைத்திருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் சேரன் கூறியதாவது, ஆட்டோகிராப் படம் 2 மணி 50 நிமிடங்கள் நேரம் கொண்டது. அன்றைக்கு இந்த படம் வெளியான போது இருந்த பொறுமையை இன்று நாம் ரசிகர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அதனால் படத்தில் 20 நிமிட காட்சியை குறைத்திருக்கிறேன். சில காட்சிகளை இன்று பார்க்கும்போது எனக்கே இது கிரிஞ்ச் பூமர் என்று தோணும். அந்த உண்மையை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகணும். அதனால்தான் தேவையில்லாத காட்சிகளை வெட்டிவிட்டேன்.
அதோடு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப ஒலியில் மாற்றம் செய்து ரி ஒர்க் பண்ணியிருக்கிறேன். இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி ஆட்டோகிராப் படம் தயார் செய்யப்பட்டது. இவ்வளவு தூரம் சிரமத்தை பார்க்காமல் உழைத்ததற்கு காரணம் இன்றைக்கு இருக்கிற பார்வையாளர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் புத்திசாலிகள். அந்த ரசிகனை ஏமாற்றினால் அவனுக்கு பிடிக்காது. எனவே ரசிகனுக்காக பொறுப்போடு நாமும் படத்தை கொடுக்கணும் என்று நினைக்கிறேன் என்று இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார்.





