தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று இரவு 7 மணியளவில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் கரூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட மொத்தம் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் இன்று மதியம் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு நடிகர் விஜய் 4 மணி நேரம் வரை தாமதமாக இங்கு வந்ததுதான் இந்த பயங்கர சம்பவத்துக்கு காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. திருச்சி விமான நிலையம் சென்று சென்னைக்கு புறப்பட்ட நடிகர் விஜய், அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் ஒரு இரங்கல் வருத்தம் கூட தெரிவிக்காமல் சென்றதும் பெரிய அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா நடிகர் ரஜினிகாந்த் தமிழக கவர்னர் ஆர்என் ரவி உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இந்த சம்பவம் குறித்து தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். நடந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா போனில் பேசி விசாரித்துள்ளார்.
மேலும் தமிழக அரசு சார்பில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் மற்றும் நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் என நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பலரும் கரூருக்கு விரைந்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்னும் சில மணி நேரத்தில் கரூருக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் இப்போது மத்திய அரசும் தலையிட்டுள்ளது. கரூரில் நடந்த சம்பவம் குறித்து தெளிவாக விளக்கத்தை உடனடியாக அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நெரிசலில் சிக்கி காயமடைந்தவர், பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் சிலர் ஆபத்தான கட்டத்தில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். அதனால் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. கரூரில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஏற்பட்ட இந்த 36 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் உலுக்கிவிட்டது.





