நடிகர் சூர்யா நடிப்பில் வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரெட்ரோ படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். இது சூர்யாவின் 44வது படமாகும். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த ரெட்ரோ படத்தை தயாரித்திருக்கின்றன. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 18ம் தேதி சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் சூர்யா நடித்த படங்கள் எதுவுமே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று ஆகிய 2 படங்கள் மட்டுமே வணிகரீதியான வெற்றி பெற்றன.
இதில் ஜெய்பீம் படத்தை தசெ ஞானவேல், சூரரைப் போற்று படத்தை சுதா கொங்கரா ஆகியோர் டைரக்ட் செய்திருந்தனர்.
ஆனால் சூர்யா நடிப்பில் தியேட்டரில் வெளியான அஞ்சான் காப்பான் சிங்கம் 3 பசங்க 2 எதற்கும் துணிந்தவன் 24 மாசு என்கிற மாசிலாமணி என்ஜிகே தானா சேர்ந்த கூட்டம் கங்குவா என எந்த படமுமே ஓடவில்லை. அதுவும் வெங்கட்பிரபு செல்வராகவன் பாண்டிராஜ் கேவி ஆனந்த் சிறுத்தை சிவா போன்ற இயக்குனர்களின் படமாகவும் அவை இருந்தன.
இந்நிலையில் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நடிகர் சூர்யாவுக்கு ரெட்ரோ படம் பெரிய திருப்புமுனையாக வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்ரோ படத்தில் இருந்து ஏற்கனவே கண்ணாடிப் பூவே என்ற பாடலும் கனிமா என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது ஏ ஒன் என்ற 3வது பாடலும் வெளியாகி உள்ளது.
இந்த பாடலை கவிஞர் விவேக் எழுதியிருக்கிறார். இந்த பாடலை சித்ஸ்ரீராம் மற்றும் ராப் பகுதியை எஸ்விடிபி ஆகியோர் பாடியிருக்கின்றனர். இந்த பாடலும் பாடல் காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வைப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வருகிற 18ம் தேதி நடக்கும் ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டுள்ளார் என்ற புதிய தகவலும் வெளியாகி உள்ளது.





