இன்றைய வாழ்க்கை சூழலை பார்க்கும்போது 40 வயதுகளை கடந்த பெரும்பாலானவர்களுக்கு தங்களது பள்ளி, கல்லூரி கால வாழ்க்கை என்பது மனதுக்கு இதம் தரும் மலரும் நினைவுகளாகவே இருக்கிறது. ஏனெனில் பள்ளி, கல்லூரிகளில் படித்த அந்த மாணவ பருவ வாழ்க்கை என்பது எல்லோருக்குமே இனிமையாக நினைவுகளாக மனதில் தங்கி விடுகின்றன.
அதனால்தான் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, 96, அழகி, பள்ளிக்கூடம் போன்ற படங்களை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் தங்களது இளமை கால வாழ்க்கை அனுபவங்களை மீண்டும் ஒருமுறை நினைத்து பார்த்து சந்தோஷப்பட ஒரு அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான படம் 96 இந்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதியும், நாயகியாக திரிஷாவும் நடித்திருந்தனர். இதில் இருவரது நடிப்புமே பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. பள்ளி பருவத்தில் பிரிந்த தனது காதலியை பல ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் விஜய் சேதுபதியின் உணர்வுகள் வேற லெவலில் ரசிக்க வைத்தது.
96 படம் வெளியாகும் முன்பு வரை நடிகை திரிஷாவின் மார்க்கெட் சற்று சரிவடைந்திருந்த நிலையில், இந்த படம் வெளியான பிறகு அவரது மார்க்கெட் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த பிறகு, இப்போது உச்ச நடிகையாக பல படங்களில் பிஸியாக திரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ம் ஆண்டில் 96 படம் வெளியான நிலையில் இந்த படத்தின் 2ம் பாகம் குறித்து ஏற்கனவே ரசிகர்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இருவரும் கடைசியிலும் சேராமல் பிரிந்து விடுவதால், அந்த படம் முழுமையடைந்த உணர்வை ரசிகர்களுக்கு தரவில்லை. அதே நேரத்தில் திரிஷா திருமணமானவராக காட்டிய நிலையில், விஜய் சேதுபதி முரட்டு சிங்கிளாக காட்டப்பட்டார்.
இப்போது வெளியான லேட்டஸ்ட் தகவலின் படி 96 படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாகிறது. பிரேம்குமார் இயக்கும் இந்த படத்தில் அதே கேரக்டர்களில் விஜய் சேதுபதி, திரிஷா நடிக்க உள்ளனர். ஆனால் இருவரும் இன்னும் கால்ஷீட் தேதிகளை முடிவு செய்யவில்லை. ஆனால் 96 படத்தின் முதல் பாகத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இயக்கியது. இந்த முறை 96 படம் 2ம் பாகத்தை தனுஷ் நடித்து வரும் இட்லி கடை படத்தை தயாரித்துள்ள டாவுன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.





