புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படம் அன்னபூரணி நேற்று ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் டீசர் ஏற்கனவே வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அக்ரஹாரத்து பெண்ணான நயன்தாரா, கையில் புத்தகத்துக்குள் மறைத்து வைத்து சிக்கன் லெக்பீஸ்களை ஆர்வமாக பார்ப்பது போன்ற ஒரு காட்சி அதில் வந்தது.
ஆனால், படத்தின் மையக்கருவே சமையல் போட்டியில் வெல்வதற்கான கதாநாயகியின் போராட்டமே என்ற தகவல் பின்னர் வெளியானது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று இந்த படம் வெளியானது. திருமணத்துக்கு பிறகும் நயன்தாராவின் மார்க்கெட் குறையாத நிலையில், இந்த படத்தை காண ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டினர்.
நயன்தாராவுடன் ஜெய் மற்றும் சத்யராஜ் இந்த படத்தில் நடித்துள்ளனர். அட்லி இயக்கிய ராஜா ராணி படத்துக்கு பிறகு இதில் ஜெய், நயன்தாராவுடன் நடித்திருக்கிறார். அதே போல் அந்த படத்திலும் நயன்தாராவின் தந்தையாக சத்யராஜ் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திலும் அவர்களது நடிப்பு, படத்துக்கு வலிமை சேர்ப்பதாகவே இருக்கிறது.
அன்னபூரணி படத்தின் முதல் நாள் வசூல், 1.5 கோடி ரூபாய் என்று எதிர்பார்த்த அளவில் நேற்று, ரூ. 60 லட்சம் மட்டுமே வசூலானது.அன்னபூரணி ரிலீஸ் ஆன முதல் காட்சியில், தியேட்டர்களில் கணிசமான கூட்டம் காணப்பட்டது. அதே போல் மற்ற காட்சிகளுக்கும் கூட்டம் இருந்தாலும் எதிர்பார்த்த வசூலை எட்டவில்லை.
அக்ரஹாரத்து மாமியாக சமையல் போட்டியில் வெற்றி பெற போராடும் நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டாராக படத்தின் நாயகியாக வெற்றி பெற்றிருக்கிறார். படத்தில் சில காட்சிகள் சொதப்பலாக இருந்தாலும் மற்ற நல்ல காட்சிகளால் அது அடிபட்டு போய், இந்த படத்தின் நாயகி அன்னபூரணி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி பெற்று விடுகிறாள்.
விடுமுறை நாள் அல்லாத நிலையில், வெள்ளியன்று இந்த படம் ரிலீஸ் ஆனது. இன்றும் நாளையும் விடுமுறை நாட்களாக இருப்பதால் நிச்சயம் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பதால், அன்னபூரணிக்கு முன்பதிவு என்பது மிக மிக சொற்பமாகவே உள்ளது. வருணபகவான் சில தினங்கள் மழை இல்லாமல் இடைவெளி விட்டால், கருணை காட்டினால் அன்னபூரணி வசூலில் இலக்கை தொடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.





