இயக்குனர் பா ரஞ்சித், தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் இயக்குனராக இருந்து வருகிறார். துவக்கத்தில் அட்டக்கத்தி என்ற ஜாலியான காதல் படத்தை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களை அசத்திய இவர் அடுத்து மெட்ராஸ் என்ற அரசியல் படத்தை அதிரடி செய்தார். ஒரு சுவர் விளம்பர புகைப்படத்தை மையப்படுத்தி, அந்த அரசியலை வேற லெவல் கதையாக்கி தந்திருந்தார்.
தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி, காலா போன்ற படங்களை தந்து பா ரஞ்சித், ஜனரஞ்சக இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தினார். கமர்ஷியல் ஹீரோ ரஜினிகாந்த்தை வைத்து நில உரிமையை மையப்படுத்தி அவர் எடுத்த கபாலி, காலா இரண்டு படங்களுமே சமூக நீதி பேசும் படங்களாக இருந்தன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து ஆர்யா, பசுபதி நடிப்பில் பா ரஞ்சித் உருவாக்கிய சார்பட்டா பரம்பரை படம், பெரிய அளவில் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. குத்து சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திலும் சமூக நீதி, உரிமைகளை தொட்டு தட்டி எழுப்பியிருந்தார் பா ரஞ்சித். இப்படி அவரது கதைகளும், கதைக்களும் மற்ற படைப்பாளிகளிடம் இருந்து வித்யாசப்பட்டு இருக்கின்றன.
இப்போது சியான் விக்ரம் நடிப்பில், தங்கலான் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பா ரஞ்சித். இந்த படம் ஜூலை மாதம் திரைக்கு வர இருக்கிறது. சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்த்த தமிழர்களின் அடிமை வாழ்க்கையை சித்தரிக்கும் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெறுவதோடு, விருதுகளையும் அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தங்கலான் படத்தை தொடர்ந்து, பா ரஞ்சித் புதிய படம் ஒன்றை இயக்க ஆயத்தமாகி வருகிறார். இந்த படத்தில் அவரது முதல் பட கதாநாயகன் அட்டக்கத்தி தினேஷ், நாயகனாக மீண்டும் நடிக்கிறார். இந்த படத்தில் வில்லனாக ஆர்யா நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் படத்தில் மீண்டும் நடிக்கும் ஆர்யா, இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் முதல் முறையாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில், அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஆர்யா ஆகியோருடன் நடிகர் அசோக் செல்வனும் நடிக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவலாக உள்ளது. இந்த படத்தில் மூன்று நட்சத்திர நடிகர்களை இணைத்து நடிக்க வைக்கிறார் இயக்குனர் பா ரஞ்சித். இந்த படத்துக்கு வேட்டுவம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வேட்டுவம் என்ற பெயரே வித்யாசமாக இருப்பதும், 3 ஹீரோக்கள் ஒன்றாக நடிப்பதும், பா ரஞ்சித் இயக்கும் படம் என்பதில் இப்போதே மாஸ் ஆன ஒரு எதிர்பார்ப்பை ரசிகா்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.





