- Advertisement -
Homeபொழுதுபோக்குசர்வதேச திரைப்படத் திருவிழாக்களில் இடம்பெறும் சூரி திரைப்படம்... கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரமாக மிளிரும் நடிகர்...

சர்வதேச திரைப்படத் திருவிழாக்களில் இடம்பெறும் சூரி திரைப்படம்… கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரமாக மிளிரும் நடிகர்…

- Advertisement -

ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சூரி. தீபாவளி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் கூட்டத்தில் ஒருவராக வந்த அவர், வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் பலராலும் பேசப்பட்டார். அதில் இடம்பெற்ற பரோட்டா நகைச்சுவை காட்சி, பலரையும் திரும்பத் திரும்ப பார்க்க வைத்ததால் பிரபலமான சூரி, அன்று முதல் பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டார்.

இதன் பிறகு சூரிக்கு, சொல்லிக் கொள்ளும் படியாக நிறைய கதாபாத்திரங்கள் அமைந்தன. குறிப்பாக சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நகைச்சுவையில் சிக்சர் அடித்தார் சூரி. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் இருவரின் கேரியர்களுமே சிறப்பான ஒன்றாய் அமைந்தன.

தொடர்ந்து பல்வேறு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், இணையதளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கேலி கிண்டலுக்கு உள்ளாக ஆரம்பித்தார். அதாவது தொடர்ந்து அவர் ஒரே மாதிரியான ரோலில் நடித்து வருவதாகவும், அவரது காமெடியில் சிரிப்பே வரவில்லை என்றும் பலர் கூற ஆரம்பித்தனர். அவர்கள் சொல்வது போலவே, சூரியின் அடுத்தடுத்த திரைப்படங்களும் அமைந்தன.

இப்படியான நேரத்தில் தான், சூரியை வேறு ஒரு நடிப்பு உலகத்திற்கு அழைத்துச் சென்றார் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தை வெற்றிமாறன் அவருக்கு கொடுக்க, அதை சிறப்பாக செய்து முடித்தார் சூரி. திரையரங்கில், சூரியன் மறைந்து காவலர் குமரேசனை ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க முடிந்ததாக பலரும் கூறினர். அவருக்காகவே அந்த திரைப்படம் எழுதப்பட்டது போல் இருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்தனர்.

விடுதலைப் படத்தில் சூரிக்கு கிடைத்த வரவேற்பு அவரை அடுத்தடுத்த படங்களுக்கு அழைத்துச் சென்றது. கூழாங்கல் திரைப்படத்தின் மூலம் சர்வதேச திரைப்பட திருவிழாக்களுக்கு பயணமான இயக்குனர் பி எஸ் வினோத்குமார், தனது கொட்டு காளி திரைப்படத்தில் சூரியை நடிக்க வைத்தார். இதனை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இதேபோல், இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ஏழு கடல் ஏழு மலை படத்தில் கதாநாயகனாக நிவின்பாலி நடிக்க அதில் சூரிக்கு முக்கிய கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், சூரி நடிப்பில் வெளியான விடுதலை, கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழுமலை ஆகிய மூன்று திரைப்படங்களும் சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் இடம் பெற்றுள்ளன. இதில் விடுதலை திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது. பெர்லினில் நடைபெறும் சர்வதேச திரைப்பட திருவிழாவில் கொட்டுக்காளி இடம்பெற்றுள்ளது. இதேபோல், நெதர்லாந்து தலைநகர் ரோட்டர் டாமில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஏழு கடல் ஏழுமலை படம் திரையிடப்படுகிறது. இந்த மூன்று திரைப்படங்களிலும் சூரி இடம் பெற்றிருப்பதால், சர்வதேச அளவில் அவர் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

சற்று முன்