இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. இது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக பொங்கலுக்கு அயலான் படத்தை ரசிகர்கள் தியேட்டர்களில் காணலாம் என்பதை படக்குழுவினரும் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அயலான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் படத்தின் இயக்குநர் ரவிக்குமார், படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜெயம் ராஜேஷ், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், மீசை தாடி இல்லாமல் இளமையான தோற்றத்தில் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் சில விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அதேபோல் படத்தின் பிரமோ நிகழ்ச்சியாக யூடியூப் சேனலுக்கும் நேர்காணல் தந்துள்ளார். இந்த படத்தின் விழாவை சிறிய அளவில் ஓட்டலில் நடத்தியதற்கும் சிவகார்த்திகேயன் விளக்கம் தந்துள்ளார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தவுடன் அங்கிருந்த அயலான் உருவ பொம்மையுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கூறியதாவது, எஸ்கே 21 படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டன. கிளைமாக்ஸ் உட்பட சில முக்கிய காட்சிகள் மட்டுமே இன்னும் எடுக்கப்பட உள்ளன. பரிசோதனை முயற்சியாக இதுபோன்ற ஒரு வித்யாசமான படத்தில் நான் நடித்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன். இது கமலுக்கு மிகவும் பிடித்த கதை. அதிலும் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் நடித்திருக்கிறேன்.
பொங்கல் பண்டிகைக்கு லால் சலாம், கேப்டன் மில்லர் என எத்தனை படங்கள் வந்தாலும், அத்தனை படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். எல்லா படங்களையும் மக்கள் வரவேற்று கொண்டாட வேண்டும்.ஏனென்றால் பொங்கல் பண்டிகை பெரிய விடுமுறை. நிறைய ரசிகர்கள் தியேட்டரில் பொங்கலை கொண்டாடுவார்கள். அதனால் பல படங்களும் அடிச்சு துவம்சம் செய்யட்டும்.
என்னை சிலர் சூப்பர் என்கிறார்கள். இன்னும் சிலர் என்னை இன்ஸ்பிரேசன் என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர் என்னை திட்டுகின்றனர். இதையெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்வதே இல்லை. என் ஹெட்டர்ஸ் பத்தி நான் ஒண்ணும் சொல்ல விரும்பவில்லை. எனக்கு பிடிச்சவங்களுக்காக என்னோட பாதையில் நான் போய்க்கொண்டு இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.





