தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகாந்த், தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைவரான விஜயகாந்த், கடந்த 28ம் தேதி காலை உடல் நலக்குறைவால் காலமானார். உடல்நலம் குன்றிய நிலையில் பல ஆண்டுகளாக முதுமை மற்றும் பலவித நோய் உபாதைகளுடன் போராடி வந்த அவர் நேற்று முன்தினம் மண்ணுலக வாழ்வை நீத்தார்.
தமிழ் சினிமாவில் துணிச்சல் மிகுந்த மனிதராக பல காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தவர் விஜயகாந்த். அதேபோல், தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு அதில் சினிமா கலைஞர்களுக்கு படப்பிடிப்பு நேரங்களில் மூன்றுவேளையும் நல்ல உணவு வழங்க ஏற்பாடு செய்தவர் விஜயகாந்த். அதுமட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே விதமான சாப்பாடு என்ற முறையை புரட்சித்தலைவர் எம்ஜிஆரை போலவே இவரும் பின்பற்றினார்.
அதுமட்டுமின்றி அரசியலிலும் பெரிய வெற்றிகளை, சாதனைகளை பெற்றார். கட்சி ஆரம்பித்த ஓரிரு ஆண்டுகளிலேயே தேர்தலை சந்தித்து 8.11 சதவீத ஓட்டுகளை பெற்றார். தொடர்ந்து 2வது தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுகவுக்கு அடுத்த நிலையில், 2வது இடத்துக்கு முன்னேறி, சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் அமர்ந்தார்.
ஆனால் தொடர்ந்து அரசியலில் அவர் செயல்பட முடியாத வகையில் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பேசுவதற்கு சிரமப்பட்டார். ஒரு கட்டத்தில் அவரால் பேச முடியாமல் போய்விட்டது. பிறகு உடல் தோற்றமும் நாளுக்கு நாள் பலவீனமாகி ஒரு கட்டத்தில் நிற்கவும், நடக்கவும், உட்காரவும் கூட மற்றவர் உதவி தேவைப்படும் அவல நிலை கேப்டனுக்கு ஏற்பட்டது. இதை எல்லாம் பார்த்து பார்த்து அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் மனம் வேதனைப்பட்டனர்.
இந்நிலையில், தன் இரண்டு மகன்களுக்கும் திருமணம் கூட செய்யாத ஒரு சூழலில், அவர்களது திருமணங்களை கூட பார்க்க வாய்ப்பின்றி அவர் மறைந்துவிட்டார். தற்போது விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், உங்களின் இதயபூர்வமான இரங்கலுக்கு நன்றி. மக்களின் இந்த ஆதரவு, எங்களின் தந்தை எப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். எவ்வளவு அன்பை சம்பாதித்திருக்கிறார் என்பதை காட்டுகின்றன. இந்த இழப்பில் இருந்து நாங்கள் மீண்டு வர இந்த கடுமையான நேரத்தில் உங்களது ஆதரவு எங்கள் குடும்பத்துக்கு ஆறுதலை அளிக்கிறது என்று அதில் கூறியுள்ளார்.





