நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், அவரது 169வது படமாக வெளியான படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெறுமா, ரசிகர்களால் வரவேற்கப்படுமா என்ற சந்தேகம், ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவருக்குமே இருந்தது. அதற்கு முக்கிய காரணம், அவர் அதற்கு முன்பு இயக்கிய பீஸ்ட்.
விஜய் ஹீரோவாக நடித்த பீஸ்ட் படத்தை பார்த்தவர்கள், இது படமா அல்லது ஏதேனும் மாயஜால மந்திரமா என்று பிரமிக்கும் அளவுக்கு ஓவர் டோஸ் ஹீரோயிசம் காட்டி, ரசிகர்களை மூச்சுத்திணற வைத்திருந்தார் நெல்சன். சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தூக்கிச் செல்வதை போல, விஜய் தமிழகத்தை தூக்கிச் செல்லும் அபத்தமான காட்சிகளை இனி வரும் விஜய் படங்களில் கண்டிப்பாக பார்க்கலாம்.
மிக மோசமான அந்த படத்துக்கும் ரசிகர்கள் வருகை இருந்ததால் வசூல் ரீதியாக அந்த படத்தை, தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ்க்கு நஷ்டத்தை தரவில்லை. அதனால், நெல்சன் படத்தில் தயக்கமின்றி நடியுங்கள் என கலாநிதிமாறன் கொடுத்த உத்தரவாதம் காரணமாக, ரஜினி ஜெயிலரில் நடித்தார்.
இது அப்பட்டமான தங்கப்பதக்கம் படத்தின் கதை என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. ஆனாலும், படத்தை வெற்றி பெற செய்ததில் முதலிடம் வில்லன் நடிகர் விநாயகம்தான். அடுத்து ரஜினி காட்டிய மாஸ், படத்தை தூக்கி நிறுத்தியது. ஜெயிலர் படத்தில் ரஜினியை தவிர வேறு யார் நடித்திருந்தாலும், நெல்சனுக்கு அதுதான் அவர் இயக்கிய கடைசி படமாக இருந்திருக்கும் என்பதை தயங்காமல் சொல்லலாம்.
இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தை எடுக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டு அதற்காக பெரும்தொகை ஒன்றை இயக்குநர் நெல்சனுக்கு கொடுத்து விட்டது. ஜெயிலர் ரூ. 515 கோடி ரூபாய் வசூலித்து விட்டதால், இதுவரை தனது படத்தின் 2ம் பாகத்தில் நடிக்காத ரஜினி, ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க சம்மதித்து விட்டார். இன்னும் ஒரு 500 கோடி ரூபாய் வசூலை பார்க்கும் ஆசையில்தான் இதற்கு ரஜினி ஒத்துக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே ஜெயிலர் 2 படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் படத்தில் மகனை, ரஜினி சுட்டுக்கொன்று விடுகிறார். முதல் பாகத்தில் ரஜினியின் பேரனாக வரும் ரித்விக்தான் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரம். அவரை மையப்படுத்தி தான் கதை செல்கிறது. ஒருவேளை பேரன் கேரக்டரில் இளமையான ரஜினி வருவாரா, அல்லது சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா என்ற விஷயமெல்லாம் போக போகத் தெரிய வரும்.





