மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழ் திரையுலகமும் கொண்டாடவும் முடிவு எடுத்தது. இதற்கு முக்கிய காரணம், தமிழ் சினிமாவில் கலைஞர் அளித்த பங்களிப்பு தான். பராசக்தியில் அவர் எழுதிய வசனங்கள், இன்றளவும் தமிழ் சினிமாவில் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
அது மட்டுமில்லாமல் பல்வேறு திரைப்படங்களுக்கும் கலைஞரின் வசனங்கள் உயிர் கொடுத்துள்ளன. இதன் காரணமாக, டிசம்பர் 24ஆம் தேதி கலைஞருக்கு நூற்றாண்டு விழாவை எடுத்துக் கொண்டாட தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது. ஆனால் மிக்ஜாம் புயல் ஏற்பட்டதால் அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 6 ஆம் தேதி, சென்னை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.
இதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைத்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. இதில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் நிச்சயமாக பங்கு பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்தனர்.
அவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள மறைந்த விஜய்காந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது, விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு நடிகர் சூர்யா கண்ணீர் வடித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்த் உடன் பெரியண்ணா திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்தார். இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் சூர்யா, கார்த்தி பங்கேற்பது போல் விக்ரமும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கின்றனர். நடிகர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர் நிச்சயமாக கலந்து கொள்கிறேன் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவர் பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை. எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத அஜித்குமார், இதில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் துபாய் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, நடிகர் அஜித்குமார் மீண்டும் அஜர்பைஜானுக்கு பறந்து விட்டாராம். அவர் அங்கு, விடா முயற்சி படப்பிடிப்பில் ஆர்வமுடன் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஒரே மூச்சில் அதன் சூட்டிங்கை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். இந்த நிலையில் அஜித் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளாமல் இருப்பது தெரிந்த விஷயம் தானே என்று அவரது ரசிகர்கள் அலட்டி கூறி வருகின்றனர்.





