மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமாகிய மு கருணாநிதியின் நூற்றாண்டு விழா திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், கலைஞருக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு செய்தது. முதலில் டிசம்பர் மாதம் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெரு மழையால், அது ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதற்காக முக்கிய நடிகர் நடிகைகள் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய கமல்ஹாசன், கலைஞரும் அரசியலும், கலைஞரும் தமிழும், கலைஞரும் திரையுலகமும் பிரிக்க முடியாதவை. பாடல்களின் பிடியில் இருந்த தமிழ் சினிமாவை, வசனத்தால் வசப்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி. எம்ஜிஆர் சிவாஜி ஆகிய நட்சத்திரங்களை தன் எழுத்தால் முக்கிய நட்சத்திரம் ஆக்கியவர் அவர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மக்களிடம் உரையாடுவதை விட கூடாது என்பதை அவரிடம் கற்றதால் தான், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.
சிறுவயதில் எனது அக்காக்கள் எனக்கு தலை சீவி விடும்போது, கலைஞர் கருணாநிதி மாதிரி நடுவகுடு எடுத்து சீவி விடுங்கள் என்று கூறுவேன் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திராவிட இயக்கம், திராவிடர் கழகம், அறிஞர் அண்ணா, கலைஞர் குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்வைக்காத விமர்சனங்களே இல்லை. ஆனால் அவர் உடல் நலம் குன்றி இருந்த போது மருத்துவத்திற்கு மிக உதவியாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி.
கலைஞர் கருணாநிதி காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய விஷயம். அதுவும் அவருடன் நாம் பேசி பழகியது மிகப்பெரிய பாக்கியம். வழக்கமாக எப்போதும் கலைஞர் ஒரு நடிகருடன் சேர்ந்தே படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அந்த சமயத்தில் அந்த நடிகர் வாக்களித்து விட்டு வெளியே வந்த போது செய்தியாளர் ஒருவர் நீங்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்க, அந்த நடிகரோ இரட்டை இலை என்று கூறிவிட்டார். அது வைரலாகியும் விட்டது.
அன்று மாலை கலைஞருடன் அந்த நடிகர் திரைப்படம் பார்க்கச் செல்ல வேண்டும். ஆனால் எப்படி போவது என்று தெரியாமல் யோசித்த நடிகர், குளிர் காய்ச்சல் என்று கூறிவிட்டார். ஆனால் அவர் வந்தே தீர வேண்டும் என்று கலைஞர் தெரிவித்துவிட்டார். அந்த நடிகரும் திரையரங்கிற்கு சென்றபோது, வாங்க குளிர் காய்ச்சல் என்று சொன்னிங்களாமே… வந்து சூரியன் பக்கத்துல உட்காருங்கள் என கலைஞர் கூறினார். அந்த நடிகர் நான்தான் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசி முடித்தார். அவரது இந்த பேச்சு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





