நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் படத்தை எடுத்த ஞானவேல் இதனை இயக்கி வருகிறார். இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத்ஃபாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் படபிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, மும்பை, சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
தற்போது வேட்டையன் திரைப்படம் இறுதி கட்டப் பணிகளை எட்டி உள்ளது. அனேகமாக இந்த திரைப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதன் சூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படங்களுக்கு நடுவே ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் எடுத்திருக்கும் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இதில் ரஜினிகாந்த் மொய்தின்பாய் என்னும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இந்த திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி வெளியாகிறது.
இதனிடையே ரஜினிகாந்த் குறித்து சமீப காலமாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட அவர் சர்ச்சையின் மறு உருவமாகவே வடிவெடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது ஜெயிலர் திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டு அடித்தது. அந்த சமயத்தில், வட மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அப்போது யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்து வணங்கியது பேசு பொருளானது.
அவரது ரசிகர்கள் உட்பட பலரும், ரஜினியின் இந்த செயலுக்கு அதிருப்தி தெரிவித்தனர். இப்படியான சூழலில் தற்போது, அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவிலும் ரஜினி கலந்து கொண்டார். அதுவும் இணையத்தில் விவாத பொருளானது. ரஜினிகாந்த் எதற்கு ஒரு தரப்பினருக்கு மட்டும் இந்த அளவுக்கு ஆதரவு கொடுக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
இப்படி ரஜினியை சுற்றி சர்ச்சை வெடித்து வர, அது குறித்து அவரது மகள் ஐஸ்வர்யா முக்கியமான விஷயம் ஒன்றை பேசியிருக்கிறார். லால் சலாம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற, அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். மேடையில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சமீப காலமாக சிலர் சங்கி என்ற வார்த்தையை கூறுகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி அல்ல. மனிதநேயம் இருப்பவரால் மட்டும்தான் லால் சலாம் போன்ற படங்களில் நடிக்க முடியும் என்று பேசினார். இதைக்கேட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கண்கள் கலங்கின.





