நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த படம் லால் சலாம். வரும் பிப்ரவரி 9ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், திடீரென ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது பிப்ரவரி 9ல் கண்டிப்பாக ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்த படத்தின் ஆடியோ லான்ச் நேற்று சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் குடும்பத்தினர், படத்தில் நடித்த நடிகர் நடிகையர், படக்குழுவினர், லைக்கா புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், படத்தின் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் உள்பட ஏராளமான ரசிகர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், அவராகவே சில விஷயங்களை முன்வந்து பேசினார். அதாவது விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன், அவருக்கு நானோ, எனக்கு அவரோ போட்டி என்று பேசுவது எல்லாம் கவுரவம் அல்ல. ரஜினிக்கு ரஜினிதான் போட்டி, அதுபோல் விஜய்க்கு விஜய்தான் போட்டி. காக்கா கழுகு கதை நான் பொதுவாக பேசியது. அதை சோஷியல் மீடியாவில் வேறு மாதிரி மாற்றி விட்டுவிட்டனர் என்று பேசியிருந்தார்.
இப்போது ரஜினிகாந்த் பேசிய அந்த விஷயங்கள் வைரலாகி வருகிறது. ஜெயிலர் படத்தில் காக்கா, கழுகு கதையை பேசியது முதலில் ரஜினிதான். அதுமட்டுமின்றி அந்த படத்தில் பட்டத்தை பறிக்க 100 பேரு என்று, சூப்பர் ஸ்டார் பட்டத்தை பலர் என்னிடம் இருந்து பறிக்க பார்க்கின்றனர் என்றும் பாடியிருந்தார். ரஜினி நினைத்திருந்தால் அந்த வரியை தவிர்த்திருக்கலாம்.
சமீபத்தில், அருணாசலம் படப்பிடிப்பு ரஜினி கலாட்டாவாக செய்த சில விஷயங்களை, சமூக வலைதளங்களில் உள்ள விஜய் ரசிகர்கள், செம வைரலாக்கி ரஜினியை டேமேஜ் ஆக்கினர். ஒரு கட்டத்தில் போலீஸ் வழக்கு என போகும் அளவுக்கு பிரச்னை சீரியஸாகி இருக்கிறது. உத்தரபிரதேச முதல்வர் காலில் விழுந்த விவகாரத்தில் ரஜினியை சமூக வலைதளங்களில் பேசு பொருளாக்கி அசிங்கப்படுத்தினர்.
இப்போது தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படம் வெளியாகிறது. இந்த படத்தையும் விஜய் ரசிகர்கள் நினைத்தால், கடுமையாக விமர்சித்து படத்தை பிளாப் ஆக்கி விடுவர். இதனால் மகளின் சினிமா எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற ஒரு நிலையில்தான், விஜயை நினைத்து நான் காக்கா கழுகு கதை சொல்லவில்லை என முன்னெச்சரிக்கையுடன் சமாதானக்கொடியை பறக்கவிட்டு உள்ளார் ரஜினிகாந்த் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.





