ஒரு படம் உருவாக முதுகெலும்பாக இருப்பது நடிகரோ, நடிகையோ, இசையமைப்பாளரோ, இயக்குனரோ அல்ல. இவர்கள் அனைவருமே இருந்தாலும், தயாரிப்பாளர் இருந்தால்தான் ஒரு படம் உருவாக முடியும், லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அவர் முதலீடு செய்தால்தான், ரசிகர்கள் காண, ஒரு திரைப்படம் தியேட்டருக்கு வரும்.
ஆனால் நடிகர்களின் வளர்ச்சியில் முதுகெலும்பாக இருப்பது பல தயாரிப்பாளர்கள்தான். தொடர்ந்து தோல்வி படங்களை தரும் இயக்குனரை, நடிகரை நம்பி மீண்டும் மீண்டும் முதலீடு செய்து படங்களை தயாரிப்பது தயாரிப்பாளர்கள்தான். ஆனால் பெரிய நடிகராக வளர்ந்த பிறகு, தனது ஆரம்ப கால வளர்ச்சிக்கு படம் தயாரித்து உதவிய தயாரிப்பாளர்களை பெரிய நடிகா்கள் கூட கண்டுக்காமல் விட்டு விடுகின்றனர்.
இந்த சூழலில், ஒரு படம் வெற்றிப்படமாக பெரிய லாபத்தை கொடுத்தாலும், அல்லது சுமாரான லாபத்தை கொடுத்தாலும், தயாரிப்பாளர்களுக்கு பெரிதும் கொடுப்பது, சமீபகாலமாக சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம் மூலம் கிடைக்கும் கணிசமான வருமானம்தான். எனினும் அந்த லாபத்திலும் பெரும்பகுதியை, தயாரிப்பாளர்கள் பெரிய நடிகர்களுக்கு சம்பளமாக கொடுக்கவும் நேரிடுகிறது.
ஆனால் முன்பெல்லாம் சின்ன நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை யாருடைய படமாக இருந்தாலும் மிக அதிகவிலை கொடுத்த சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம் வாங்கிக்கொண்டு இருந்த டிவி சானல்கள் மற்றும் ஓடிடி தளங்கள் இப்போது விலையை வெகுவாக குறைத்துவிட்டன. பெரிய நடிகர்களின் படங்களுக்கே முன்பு இருந்ததை விட 50 முதல் 60 சதவீதம் விலையை குறைத்துக் கேட்கின்றன.
அதுமட்டுமின்றி படம் ரிலீஸ் ஆனபிறகு படத்தை நாங்கள் பார்த்த பிறகுதான் விலையை நிர்ணயிக்க முடியும் என்ற ஒரு முடிவுக்கும் ஓடிடி தளங்கள் வந்துவிட்டன. அதனால் படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றால் மட்டுமே ஓடிடி தளங்கள் ஓரளவுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்ளும். இல்லை என்றால் வேண்டாம் என்று மறுத்துவிடும். நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தையே பார்த்த பிறகுதான் விலை பேச முடியும் என நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனால் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள தயாரிப்பாளர்கள், இனி பெரிய ஹீரோ்ககள் தங்களது சம்பளத்தை குறைத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர். அதை புரிந்துக்கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, மகாராஜா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த போதிலும், தனது சம்பளத்தை ரூ. 17 கோடியில் இருந்து ரூ. 10 கோடியாக குறைத்திருக்கிறார். ஆனால் 200 கோடி, 165கோடி, 150 கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்றவர்கள்தான், தங்களது சம்பளத்தை வெகுவாக குறைக்க வேண்டும் என்கின்றனர் சில தயாரிப்பாளர்கள்.





