நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்து வருகிறார். வருகிற ஏப்ரல் மாதத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. இந்த படத்தை பெங்களுரூவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ பிரியாமணி அபிராமணி கௌதம் மேனன் பிரகாஷ் ராஜ் நரேன் பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெலுங்கில் வெளியான பகவந் கேசரி படத்தின் ரீமேக் இந்த படம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழுவிடம் இருந்து அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
தளபதி 69 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட இந்த படத்தின் பெயர் ஜனநாயகன் என்று அறிவித்து, கடந்த 26ம் தேதியன்று குடியரசு தினத்தின் படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்தது. அன்று மாலை 4 மணிக்கு படத்தின் செகண்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
அன்று காலையில் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் வாகனம் ஒன்றின் மீது நின்று செல்பி எடுப்பது போலவும், அவருக்கு பின்னால் ஆயிரக்கணக்கான மக்கள் நிற்பது போலவும் காட்சி இருந்தது. மாலையில் வெளியிட்ட 2வது போஸ்ட்ரில் விஜய் சிரித்தபடி கையில் சவுக்கை சுழற்றுவது போலவும் காட்சி இருந்தது. அதில் நான் ஆணையிட்டால் என்ற வாசகங்களும் இருந்தன.
இதையடுத்து, ஜனநாயகன் படம் அரசியல் கலந்த படம்தான் என்பதும், வரும் அக்டோபரில் திரைக்கு வர திட்டமிட்டிருந்த இந்த படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வர படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இதில் விஜய் அரசியல் வசனங்கள் பேசியிருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் எங்க வீட்டுப்பிள்ளை படத்தில், மக்கள் திலகம் எம்ஜிஆர் நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்… என்ற கொள்கை பாடலை பாடியிருப்பார். ஒருவேளை ஜனநாயகன் படத்தில் அந்த பாடலை விஜய் பாடுவது போல் ரீமிக்ஸ் செய்திருக்க அதிக வாய்ப்புள்ளது. அதனால் அப்படி ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அப்படி வந்தால் அது அருமையாக இருக்கும் என்று மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.





