நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா. தெலுங்கு தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழியிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பகத் பாஸிலும் படத்தில் இடம்பெற்று இருந்தார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை சுகுமார் என்பவர் இயக்கி இருந்தார்.
படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின. இந்தப் படத்திற்காக துல்லியமாக இசையமைப்பதற்காக, தேசிய விருது பெற்றார் தேவி ஸ்ரீ பிரசாத். அல்லு அர்ஜுனும் இதில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். லாரி டிரைவருக்கு ஏற்றது போல தனது கதாபாத்திரத்தை மாற்றிக் கொண்ட அவர், தோள்பட்டையை ஒருபுறம் இறக்கி படம் முழுவதும் நடித்து புஷ்பராஜ் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகத்தை பார்க்க ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் சூழலில், அந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில் புஷ்பா படத்தின் வெற்றிக்கு இயக்குனர் எழிலும் காரணம் என்று பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறி இருக்கிறார்.
துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எழில். அந்தப் படத்தின் கதையை பலரிடமும் எழில் போல, யாருமே இயக்க முன்வராத நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது. விஜய்யின் திரையுலக வாழ்வில் மிக முக்கியமான படமாக அமைந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம், நீண்ட நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு, தயாரிப்பாளருக்கு ஏற்ற இயக்குனர் என்னும் பெயரை பெற்றார் எழில். அஜித்தை வைத்து பூவெல்லாம் உன் வாசம், ராஜா ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கினார். இதில் பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதேபோல் சிவகார்த்திகேயனை வைத்து மனம் கொத்தி பறவை, விமலை வைத்து தேசிங்குராஜா ஆகிய திரைப்படங்களை எடுத்து ஹிட் கொடுத்தார் எழில். தற்போது திரையுலகத்திற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அவர் அடுத்ததாக தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்.
இந்த நிலையில் எழிலின் 25 ஆண்டு கால திரை உலக வாழ்க்கை மற்றும் தேசிங்குராஜா படத்தின் இரண்டாம் பாகம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர் எழிலை வாழ்த்தினார். விஷ்ணு விஷாலை வைத்து அவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தை வெற்றி படமாக கொடுத்ததாகவும், அதில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் வசனம் மிகப்பெரிய அளவில் ரிலீசானதாகவும் தெரிவித்தார். இதனால் புஷ்பா திரைப்படத்தின் வெற்றிக்கு எழிலும் ஒரு காரணம் என்று அவர் பேசினார். இந்நிலையில் தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.





