இப்போது தமிழ் தெலுங்கு சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இல்லை. ஏராளமான நடிகர் நடிகைகள் இருந்த போதும் ஏராளமான புதுமுக இளம் நடிகர் நடிகைகள் வந்துக்கொண்டே தான் இருக்கின்றனர். இளம் இயக்குனர்களும் அதிகமாக திரையுலகிற்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் நல்ல கதைககளுக்கு தான் பஞ்சம் அதிகமாக உள்ளது.
சரக்கு இல்லாத பல இயக்குனர்கள் பழைய படங்கள் அல்லது வேறு மொழி படங்களின் கதைகளை சுட்டு பழைய மொந்தையில் புதிய கள் என்கிற வகையில் ஜெராக்ஸ் கதைகளை படமாக்கி தந்து வருகின்றனர். இப்போதெல்லாம் புதிய கதை டிஸ்கஷன் என்பது மாறி, பழைய கதைகளை எப்படியாவது மாற்றி திரைக்கு கொண்டு வருவதுதான் ஸ்டோரி டிஸ்கஷன் போல நடக்கிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அனில் ரவிபுடி. எஃப் 2 எஃப் 3 பகவந்த் கேசரி சங்கராந்திக்கு வஸ்துனா மனசங்கர வரபிரசாத் காரு உள்ளிட்ட கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றவர் இயக்குனர் அனில் ரவிபுடி. தற்போது இயக்குனர் அனில் ரவி புடி நடிகர் வெங்கடேஷ் கூட்டணி, சங்கராந்திக்கு வஸ்துனா படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்து ஒரு புதிய படம் உருவாகிறது.
இந்த படம் அடுத்த 2027ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்து தெலுங்கு சினிமாவின் இளம் நாயகன் நந்தமுரி கல்யாண் ராம் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் வெங்கடேஷூக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், நந்தமுரி கல்யாண் ராம்க்கு ஜோடியாக இளம் நாயகி கிருத்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் பூஜை மற்றும்துவக்க விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில் இந்த படம் 2024ம் ஆண்டில் மலையாளத்தில் பிருத்விராஜ் பசில் ஜோசப் நிகிலா விமல் அனஸ்வரா ராஜன் இணைந்து நடித்து வெளிவந்த குருவாயூர் அம்பல நடையில் படத்தின் ரீமேக் தான் என்ற தகவல் பரவியது.
இது மலையாளத்தில் பெரிய வரவேற்பை பெற்ற ஒரு படமாகும். தனது காதலி தனது நண்பனின் மனைவி என்கிற சூழலில் இந்த கதை ஒரு வித்யாசமான கதைக்களத்தில் ரசிக்கும்படி இருக்கும். அதனால் இந்த படம் தான் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது என ஒரு தகவல் பரவியது. இதற்கு படத்தின் நாயகி நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக மலையாள படத்தின் ரீமேக் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.





