தமிழ் சினிமாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் கடும் போட்டியாளர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆர் சிவாஜி. உண்மையில் அவர்களது படங்களும், அவர்களது ரசிகர்களும் தான் மோதிக்கொண்டார்களே தவிர, எம்ஜிஆரும், சிவாஜியும் இணை பிரியாத நண்பர்களாக தான் இருந்தனர். பல வேளைகளில் எம்ஜிஆர் சாப்பிடுவது, சிவாஜி கணேசனின் அம்மா கைகளில்தான்.
அதேபோல் 40 ஆண்டுகளுக்கு முன், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய போட்டியாளர்களாக கருதப்பட்டவர்கள் ரஜினிகாந்த் – கமல்ஹாசன். இவர்களும் அதே போல்தான். படங்களில், ரசிகர்களில்தான் போட்டியாளர்கள் இருந்தார்களே தவிர, இவர்கள் இருவரும் அன்று முதல் இன்று வரை நெருங்கிய நண்பர்கள்தான். பல ஆண்டுகளுக்கு முன் ரஜினி லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த போது, நீங்கள் கோடி ரூபாய் சம்பளம் கேளுங்கள் என யோசனை சொன்னவரே நடிகர் கமல்ஹாசன்.
அந்த வரிசையில் இப்போது போட்டி நடிகர்களாக களத்தில் நிற்பவர்கள் விஜய், அஜீத்குமார். வழக்கம்போல இவர்களது படங்களுக்கு சவாலில் பலத்த போட்டி உள்ளது, அதே போல் விஜய், அஜீத் ரசிகர்கள் மோதலும் இருக்கிறது. அன்றைய காலத்தில் இப்படி இரு தரப்பாக பிரிந்து நிற்கும் ரசிகர்கள் போஸ்டர்களை கிழிப்பார்கள். இப்போது சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டு கிழித்துக் கொள்கிறார்கள். இது நவீன தொழில்நுட்ப வளர்ச்சி தந்த மாற்றம்.
இதற்கிடையே விடாமுயற்சி படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒரு பாடல் மட்டுமே அஜீத் திரிஷா பாடுகிற டூயட் பாடலாக உள்ளது. படத்துக்கு அனிரூத் இசையமைத்துள்ளார். மகிழ்திருமேனி, அஜீத், அனிருத் காம்பினேஷன் இந்த முறை பெரிய வெற்றியை படத்துக்கு தரும் என்ற எதிர்பார்ப்பு அஜீத் ரசிகர்களிடையே நிலவுகிறது.
சமீபத்தில் அஜீத்குமார் போட்டோஷூட் நடத்தப்பட்ட நிலையில் அஜீத்குமார், திரிஷா பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக வாய்ப்பு உருவாகியுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அந்த தேதியை நிர்ணயிக்கப் போவது நடிகர் விஜய்தான் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
அதாவது விஜய் பற்றிய பரபரப்பான செய்திகள் வெளியாகும் போது, தன்னை பற்றிய, தன் படங்களை பற்றிய அறிவிப்புகளை அப்டேட் செய்வது அஜீத் வழக்கமாக இருந்து வருகிறது. இப்போது விஜய் கட்சி துவங்க இருப்பதால், அவர் கட்சி பெயரை அறிவிக்கும் வேளையில், தனது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுமாறு, படக்குழுவினருக்கு அஜீத் தரப்பில் இருந்து உத்தரவு பறந்ததாக கூறப்படுகிறது. அதனால் விஜய் கட்சி பெயரை அறிவிக்கும் நாளில், அஜீத் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும்.





