விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். சமீபத்தில் கூட பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ/மாணவியர்களை நேரில் சந்தித்த விஜய், அவர்களுக்கு ஊக்கத்தொகையையும் கல்விச்சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே போல் விஜய் மூன்று வருடங்கள் சினிமாவுக்கு பிரேக் எடுத்து தனது கட்சிப்பணிகளில் மூழ்கப்போகிறார் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அது வெறும் வதந்தி என்று தெரிய வந்தது. இந்தளவிற்கு விஜய்யின் அரசியல் நுழைவு குறித்த விவாதங்கள் சூடு பிடித்து வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சினிமா விழாவில் கலந்துகொண்ட பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன், விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த விழாவில் பேசிய அவர், “ஏழை மக்களுக்கு உதவி செய்கிறோம் என்று சொல்கிறாரே, உனது படத்துக்கு ஆயிரம் ரூபாய் டிக்கெட் விற்கிறார்களே, அதை போய் சொல்லு, ஆயிரம் ரூபாய் விற்காதே என்று. அரசு என்ன விலை நிர்ணயித்திருக்கிறதோ, அந்த விலைக்கு விற்க சொல்லுங்களேன் பார்ப்போம். இப்படி இருக்கையில் நீங்கள் அரசியலுக்கு வந்து சமூகத்திற்கு என்ன செய்ய போகிறீர்கள். ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்பதையே உங்களால் தடுக்க முடியவில்லை. இதில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பற்றி பேசுகிறார்கள்” என கூறினார்.

மேலும் பேசிய அவர், “விஜய் நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு போகிறார் என கூறுகிறார்கள். அப்படி ஒன்றும் வயது ஆகிவிடவில்லை. அவர் ஒரு நல்ல நடிகர். இன்னும் நடிக்கலாம். அவர் அரசியலும் செய்யட்டும். மக்கள் ஏற்றுக்கொண்டால் வளரட்டும்” என்றும் கூறியிருந்தார்.





