நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இதனை, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் சூட்டிங் பணிகள், தாய்லாந்து, சென்னை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் டி.ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜய் இளமையாக காட்டும் முயற்சியில் பட குழு ஈடுபட்டு வருகிறது.
படத்திலும் விஜய்க்கு இரண்டு கதாபாத்திரம் தான் என்று கூறப்படுகிறது. அதேசமயம் இது டைம் ட்ராவல் கான்செப்ட்டை கையில் எடுத்திருப்பதால், காலகட்டத்தின் அடிப்படையில் வயது குறைந்த மற்றும் வயது முதிர்ந்த விஜயை காட்டி இருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இந்த படத்திற்கான 50 சதவீத சூட்டிங் பணிகள் தற்போது நிறைவடைந்து இருக்கின்றன. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யோகி பாபு, ஜெயராம், இவானா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில், நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்தார். இதற்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கட்சியை ஆரம்பித்து விட்டு வெளியிட்ட முதல் அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் கவனம் செலுத்தப் போவதில்லை என்று விஜய் தெரிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதே தமது இலக்கு என்றும், இதன் காரணமாக அடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ள திரைப்படத்தை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்துவதாகவும் விஜய் தெரிவித்து இருந்தார்.
இப்படியான சூழலில் தான் விஜயின் அடுத்த திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி நிறுவனம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் பேச்சு அடிபட்டு உள்ளது என்றாலும், இயக்குனர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அட்லி, கார்த்திக் சுப்புராஜ், எச் வினோத், சங்கர், லோகேஷ் கனகராஜ், நெல்சன் என படையெடுத்த இந்த பட்டியலில் தற்போது வெற்றிமாறனும் இணைந்து இருக்கிறார். அவர் விஜய்யிடம் கதை கூறியிருப்பதாகவும் அதற்கு விஜய்யும் ஒத்துக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கோட்டாநீலிமா எழுதிய Shoes of the Dead நாவலைத்தான், வெற்றிமாறன் படமாக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





